சோளிங்கர் அருகே பரபரப்பு குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

சோளிங்கர், ஏப்.21: சோளிங்கர் அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சோளிங்கர் அடுத்த தென்பாராஞ்சி கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக அப்பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவேரிப்பாக்கம் பிடிஓ அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சோளிங்கர்-அரக்கோணம் சாலையில் பாராஞ்சி பஸ்நிறுத்தம் அருகே நேற்று காலை 8 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சோளிங்கர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிடிஓ விநாயகத்திடம் தெரிவித்தும், அவர் அலட்சியமாக பதில் அளித்தார். எனவே, குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கும்வரை மறியலை கைவிடமாட்டோம்’ எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பிடிஓவை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், கிராம மக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, காலை 11 மணியளவில் அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக போர்வெல் சரி செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: