குடியாத்தத்தில் பரபரப்பு மனைவியை எரித்துக் கொன்ற காவலாளி தூக்கில் சடலமாக மீட்பு

பேரணாம்பட்டு, ஏப். 21:  குடியாத்தத்தில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த காவலாளி பேரணாம்பட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒலக்காசி ரோடு, இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கனிமொழி(37), இவரது கணவர் மதிவாணன்(40), இவர்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஹரி, குணா என 2 மகன்கள் உள்ளனர். மதிவாணன் தனியார் குடோனில் காவலாளியாக இருந்து வந்தார். இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான மதிவாணன் கடந்த சில தினங்களுக்கு முன்பு விரதமிருந்து சபரிமலை சென்று வந்தார். நேற்று முன்தினம் காலை மதிவாணன் மனைவி கனிமொழியிடம் மது அருந்த பணம் தருமாறு கேட்டு தகாராறில் ஈடுபட்டார். அதற்கு கனிமொழி வேலைக்கு செல்லாமல் இப்படி தினமும் குடித்துவிட்டு வருகிறாயே என கேட்டாராம்.

இதனால் ஆத்திரமடைந்த மதிவாணன் வீட்டின் கதவை தாழிட்டு கனிமொழி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். கனிமொழியின் அலறல் சத்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் கனிமொழி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குடும்பத்தினர் துக்க நிகழ்ச்சியில் இருக்கவே தப்பி ஓடிய மதிவாணணை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று பேரணாம்பட்டு அடுத்த கொண்டம்பல்லி கிராமத்தில் சாலையோரம் உள்ள புளியமரத்தில் தான் அணிந்திருந்த வேட்டியில் மதிவாணணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து மதிவாணன் மகன் குணா அளித்த புகாரின்பேரில் பேரணாம்பட்டு எஸ்ஐ சிலம்பரசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மனைவியை எரித்து கொன்று கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: