வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைகளை உதவி தேர்தல் அலுவலர் கண்காணிக்க உத்தரவு

வேலூர், ஏப். 21: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள அறையை உதவி தேர்தல் அலுவலர்கள் தினமும் காலை, மாலை கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவான இயந்திரங்கள் மற்றும் சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவான இயந்திரங்கள் வாலாஜா டோல்கேட் அருகிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கான இருட்டறைக்கு நேற்று முன்தினம் சீல் வைக்கப்பட்டது. இதேபோல் ஆம்பூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவான இயந்திரங்கள் வேலூர் தந்தை பெரியார் அரசினர் ெபாறியியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இருட்டறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம், தமிழ்நாடு ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலீசார் அடங்கிய 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவர்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை உதவி ேதர்தல் அலுவலர்கள் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் சென்று பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதை உறுதி செய்வதற்காக உதவி தேர்தல் அலுவலர்கள் அங்குள்ள நோட்டில் நேரத்தை குறிப்பிட்டு ைகயெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வரும் அரசியல் கட்சியினரும் நோட்டு புத்தகத்தில் கையெழுத்திட வேண்டும். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் கலெக்டர் ராமன், எஸ்பி பிரவேஷ்குமார் ஆகியோர் வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, அவர்கள் அங்குள்ள நோட்டில் கையெழுத்திட்டனர். தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் வாலாஜா டோல்கேட் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை கலெக்டர் ராமன், டிஆர்ஓ பார்த்தீபன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

Related Stories: