×

சேத்துப்பட்டு பஸ் நிலையத்தில் பெண்களை செல்போனில் படம் பிடித்த வாலிபருக்கு தர்ம அடி

சேத்துப்பட்டு, ஏப்.21: சேத்துப்பட்டு பஸ் நிலையத்தில் பெண்களை செல்போனில் படம் பிடித்த வாலிபருக்கு அங்கிருந்த பெண்கள் தர்ம அடி கொடுத்தனர். சேத்துப்பட்டில் நேற்றுமுன்தினம் சென்னை, காஞ்சிபுரம், வந்தவாசி போன்ற ஊர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டதால் பஜார் மற்றும் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, பஸ் நிலையத்தில் இருந்த ஒரு வாலிபர் தோளில் பை மாட்டிக்கொண்டு நான்குமுனை சந்திப்பு பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த பெண்களை தனது செல்போனில் பலவிதமாக கோணங்களில் படம் எடுத்துக்கொண்டிருந்தாராம்.

இதைப்பார்த்த ஒரு சில பெண்கள் அந்த வாலிபரிடம் சென்று தட்டிக்கேட்டனர். இதனால் அந்த வாலிபர், நைசாக அங்கிருந்து நழுவி வேறு பஸ் நிலையத்தின் மற்றொரு பகுதிக்கு சென்று மீண்டும் பெண்களை படம் எடுக்க தொடங்கினாராம். இதைப்பார்த்த ஒரு பெண் வாலிபரிடம் தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர், தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த வாலிபரின் சட்டையை பிடித்து கன்னத்தில் ‘பளார், பளார்’ என 2 அறைவிட்டார்.

அதற்குள் அங்கிருந்த மக்கள் நடந்த சம்பவங்களை அறிந்து வாலிபருக்கு தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்த சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்ததில், அந்த வாலிபர் போளூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த கலைமணி(27) என்பதும், இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்வதும் தெரியவந்தது. தேர்தலில் வாக்களிக்க வந்து, மீண்டும் சென்னை திரும்ப முயன்றபோது செல்போனில் படம் எடுத்து சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bus station ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்