தேர்தல் அதிகாரிகள் பதற்றம் பதிவான வாக்குகள் விவரம் சேகரிக்க தாமதம்

திருப்பூர், ஏப்.19: திருப்பூர் மக்களவை தொகுதியில் உள்ள  ஆயிரத்து 704 வாக்குப்பதிவு மையங்களில் வேலை பார்த்த தேர்தல் அலுவலர்கள்   தங்களது மையத்தில் பதிவான வாக்குகள் குறித்த தகவல்களை மாவட்ட தேர்தல்  கட்டுப்பாட்டு அறைக்கு குறித்த நேரத்திற்கு அனுப்பாமல்  காலதாமதப்படுத்தியதால்  தேர்தல் அதிகாரிகள்  நேற்று பதட்டம்  அடைந்தனர். காலை 9 மணி முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பூத் வாரியாக வாக்குப்பதிவு விபரங்களை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வாக்குபதிவு மையங்களில் வேலை பார்த்த அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. திருப்பூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆயிரத்து 704 வாக்குபதிவு மையங்களில் வேலை பார்க்கும் பெரும்பாலான ஊழியர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து போதிய அனுபவம் இல்லாததால் 9 மணிவரைக்குள் பதிவான வாக்குகள் குறித்த தகவல்களை  மாவட்ட நிர்வாகத்திற்க்கு தெரியப்படுத்தவில்லை. இதனால் திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பதட்டமடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் குறித்த தகவல்கள் வெளிவந்த நிலையில் திருப்பூர் மக்களவை தொகுதியிலிருந்து மட்டும் வாக்குபதிவு குறித்த தகவல் வெளியிடவில்லை.  9 மணிக்குள் பதிவான வாக்குகள் குறித்த தகவல்களை  மாவட்ட நிர்வாகம் சேகரிக்க 10.30 மணி ஆனது. வாக்குபதிவு மையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் குளறுபடியால் வாக்குபதிவு குறித்த விபரங்களை சேகரிக்க முடியாமல் திருப்பூர் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அதிகாரிகள் திணறினர். பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சுதாரித்துக்கொண்டு  வாக்குபதிவு மையங்களிலுள்ள ஊழியர்களை விரட்டி விரைவாக  வாக்குப்பதிவு விபரங்களை வாங்கி உயர் அதிகாரிகளுக்கு புள்ளி விபரங்களை தெரிவி–்த்தனர்.

Related Stories: