திருப்பூர் மக்களவை தொகுதியில் 72.88 சதவீதம் வாக்குப்பதிவு

திருப்பூர், ஏப்.19: திருப்பூர் மக்களவை தொகுதியில் நேற்று விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் மொத்தம் 72.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.  தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடந்தது. திருப்பூர் தொகுதியில் நேற்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட ஒரு சில பிரச்னைகள் தவிர வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. திருப்பூர் மக்களவை தொகுதியில்  திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, கோபி, பவானி, அந்தியூர், பெருந்துறை  ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது. திருப்பூர் மக்களவை தொகுதி 6  சட்டசபை தொகுதியில் உள்ளன, மொத்தம் 704 இடங்களில் வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டது.   திருப்பூர் மக்களவை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 62  ஆயிரத்து  935 பேர்,  பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 66 ஆயிரத்து 765  பேர்  திருநங்கைகள் 136  பேர் வாக்காளர்கள் உள்ளனர். தொகுதிகளில் உள்ள ஆயிரத்து 704 வாக்குப் பதிவு மையங்களில் காலை 7 மணி  வாக்குப்பதிவு துவங்கியது.  

 வாக்காளர்கள் பெரும்பாலானோர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களித்தனர். திருப்பூர் தொகுதியில் 12 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வாக்குப்பதிவு இயந்திரமும், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரமும் பயன்படுத்தப்பட்டன. தொகுதியில் உள்ள 1,704 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட பழுதால்  வாக்குப்பதிவு சற்று தாமதமானது. தொகுதி முழுக்க காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. காலை 7 மணி முதல் 9 மணிவரை தொகுதி முழுவதும் 13 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. தொடர்ந்து காலை 9 மணிக்கு பின்னர் வாக்குப்பதிவு மேலும் விறுவிறுப்பாக நடந்தது. காலை 11 மணி நிலவரப்படி திருப்பூர் தொகுதியில் 30.60 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி 38.40 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 56.41 சதவீத வாக்குகளும், 5 மணி நிலவரப்படி 66.60 சதவீதமும் பதிவாகியிருந்தது.

இறுதியாக திருப்பூர் தொகுதியில் மொத்தம் 72 சதவீத வாக்குகள் பதிவானது. திருப்பூர் பழனியம்மாள் மநகராட்சி  பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கே.எஸ்.சி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  வாக்குச்சாவடி மையங்களில் நடந்த வாக்குப்பதிவினை தேர்தல் நடத்தும்  அலுவலரும், திருப்பூர் மாவட்ட கலெக்டருமான பழனிசாமி நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.

 தொடர்ந்து அனைத்து வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மே மாதம் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை திருப்பூர் எல்.ஆர்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Related Stories: