நாட்டுக்கு நல்லது செய்தது போல் உணர்கிறோம்

கோவை, ஏப்.19: கோவை மக்களவை தொகுதியில் நேற்று வாக்களித்த புதிய வாக்காளர்கள் நாட்டுக்கு நல்லது செய்தது போல் உணர்கிறோம் என்று கருத்து தெரிவித்தனர்.இது குறித்து புதிய வாக்காளர்கள் கூறியதாவது:- பெங்களூரில் மென்பொருள்  நிறுவன பணியாளர் வைஷ்ணவி:-கடந்த தேர்தலில் என்னால் வாக்களிக்க இயலவில்லை. இந்த முறையும்  எனக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இருந்த போதிலும் வாக்களிக்க வேண்டும் என்ற முனைப்பில் விடுப்பு எடுத்து வந்துள்ளேன். வாக்களித்ததால் நாட்டிற்கு நல்லது செய்ததை போல் உணர்கிறேன். எந்த வேலையாக இருந்தாலும் வாக்களிக்கும் கடமையை இளைஞர்கள் செய்தாக வேண்டும். வரும் தேர்தல்களில் நூறு சதவீத வாக்குப்பதிவு கட்டாயம் இருக்க வேண்டும்.கல்லூரி மாணவர் கமலேஷ்:-இளைஞர்கள் மூலமாக தான் நாட்டின் பிரச்னைகளை தீர்க்க முடியும் என்று நம்புகிறேன். நான் முதன் முதலில் எனது வாக்கை செலுத்தியுள்ளேன். எனது நண்பர்கள் சிலர் வாக்களிப்பதால் எந்த நன்மையையும் ஏற்படாது என்று பேசுகின்றனர். அவ்வாறாக நினைப்பது தவறு. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அனைவரும் வாக்களிக்க வேண்டும். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் இன்று வாக்களித்துள்ளோம். நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்.

தனியார் நிறுவன ஊழியர் சரவணன்:- எனக்கு இந்த முறை தான் வாக்களிக்கும் உரிமை கிடைத்தது.  மாற்றம் மக்களிடம் இருந்து தான் தொடங்க வேண்டும். நான் மாற்றியுள்ளேன். மக்கள் அனைவரும் மாறினால் நல்லாட்சி அமையும். நாட்டிற்காக சேவைசெய்ததை போல் உணர்கிறேன். மிகவும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து எனது வாக்கை செலுத்தியுள்ளேன்.கல்லூரி மாணவர் தரணி:-ஒருவிரல் புரட்சி என்று எண்ணி எனது முதல் வாக்கை பதிவு செய்துள்ளேன். மிகவும் பெருமையாக உள்ளது. ஏனென்றால் எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வந்து நாட்டிற்கு நல்லது செய்துள்ளேன். அரசியலில் ஈடுபாடு அதிகரித்து அடுத்த தலைமுறை வளர வேண்டும். பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களின் அடிப்படையில் வாக்களிக்க கூடாது. நாம் சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அதற்கு இளைஞர்கள் அரசியல் பயில வேண்டும். அடுத்து வரும் புதிய வாக்காளர்கள் இன்னும் நேர்த்தியாக செயல்பட வேண்டும்.இவ்வாறு புதிய வாக்காளர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

Related Stories: