வாக்குப்பதிவு இயந்திரங்கள் விடிய விடிய வந்து சேர்ந்தன

கோவை, ஏப்.19: கோவை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஓட்டு மெஷின்கள் நேற்று இரவு எண்ணிக்கை மையத்திற்கு வந்து சேர்ந்தன.கோவை மாவட்டத்தில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கான ஓட்டு பதிவு நேற்று நடந்தது. கோவை தொகுதியில், பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் என 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. இதில் 2,045 ஓட்டு சாவடிகளில் இருந்து 2,453 ஓட்டு மெஷின்கள் ஓட்டு பதிவிற்கு பயன்படுத்தப்பட்டது. இத்துடன் யாருக்கு ஓட்டு போட்டோம் என தெரிந்து கொள்ளும் மெஷின் மற்றும் கட்டுபாட்டு மெஷின் போன்றவையும் பயன்படுத்தப்பட்டது. ஓட்டு பதிவு முடிந்து, இரவு 9.30 மணிக்கு பிறகு ஒட்டு பதிவு மெஷின்கள் மற்றும் ஆவணங்கள், தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரிக்கு விடிய விடிய கொண்டு செல்லப்பட்டது. 69 வாகனங்களில், ஓட்டு மெஷின்கள் அரசு தொழில் நுட்ப கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோவை நகரில் உள்ள சுமார் 300 ஓட்டு சாவடிகளில் இருந்து 13 வாகனங்கள் நள்ளிரவு அரசு தொழில் நுட்ப கல்லூரிக்கு வந்து சேர்ந்தது.  விடிய விடிய வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு மெஷின்கள் கொண்டு வரப்பட்டு, ஸ்ட்ராங்க் ரூம்களில் வைக்கப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை மையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 700 போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் கமிஷன் அனுமதி பெற்றவர்கள் தவிர மற்றவர்கள் ஓட்டு எண்ணிக்கை மைய வளாகத்தில் அனுமதிக்கப்படவில்லை.

Related Stories: