வாக்குச்சாவடி மையங்களில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு

ஈரோடு, ஏப். 19: ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில்  913 வாக்குப்பதிவு மையங்களில் 2 ஆயிரத்து 213 வாக்குச்சாவடி  அமைக்கப்பட்டன. பொதுமக்கள் வசதிக்காக 2 கி.மீட்டருக்கு ஒரு வாக்குச்சாவடி  வீதம் அமைக்கப்பட்டது. இந்த தேர்தலுக்காக புதிதாக 19 வாக்குச்சாவடி  அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் ரோடு பகுதியை  கவர் செய்யும் வகையில் கேமரா பொருத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும்  ஆயிரத்து 200 கேமரா பொருத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற  பகுதிகளில் 500 வாக்குச்சாவடியிலும், 222 பதற்றமான வாக்குச்சாவடியிலும் என  மொத்தம் 722 வாக்குச்சாவடியில் வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு  கண்காணிக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடியில் 2,500  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களை தவிர ஆந்திர  மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து எஸ்எஸ்பி படை பிரிவு உதவி கமாண்டன்ட்  அஜித்சிங் தலைமையில் 87 பேரும், மத்திய பிரதேசத்தில் இருந்து எஸ்ஏஎப் படை  பிரிவு இன்ஸ்பெக்டர் நாகேஸ் தலைமையில் 109 பேரும், கோவை பட்டாலியனில்  இருந்து 78 பேரும், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 193 பேரும் என துணை  ராணுவ வீரர்கள் 467 பேர் வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு  பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற  போலீசார், ஊர்க்காவல்படை வீரர்கள், தீயணைப்புத்துறையினர், வனத்துறையினரும்  தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும்  வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு உதவ 1,200 என்எஸ்எஸ் மாணவர்களும்  பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும்  வகையில் வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.

Related Stories: