ஈரோடு மக்களவை தொகுதியில் 72.67 சதவீதம் வாக்குப்பதிவு

ஈரோடு, ஏப். 19:ஈரோடு மக்களவை தொகுதியில் காலை முதல் மாலை வரை விறுவிறுப்பான வாக்குபதிவு நடைபெற்றது. இறுதி நிலவரப்படி 72.67சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக கணேசமூர்த்தி, அதிமுக வேட்பாளராக வெங்கு மணிமாறன், அமமுக செந்தில்குமார், மக்கள் நீதி மய்யம் சரவணக்குமார், நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமி உள்பட 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. முன்னதாக அனைத்து வாக்குசாவடிகளிலும் அரசியல் கட்சிகளின் வாக்குசாவடி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குபதிவு நடைபெற்றது. வாக்குபதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். காலை நேரம் என்பதால் பெண் வாக்காளர்கள் குறைந்த அளவிலேயே வந்தனர். ஆண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

Advertising
Advertising

10 மணிக்கு மேல் ஆண் வாக்காளர்களுக்கு இணையாக பெண் வாக்களர்களும் வந்தனர். ஈரோடு மக்களவை தொகுதியில் மொத்தம் 1678 வாக்குசாவடி அமைக்கப்பட்டு வாக்கு பதிவு நடந்தது. பதட்டம் நிறைந்த வாக்குசாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 148 வாக்குசாவடிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், வெப்கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. இந்த தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் விவிபேட் இயந்திரம் அனைத்து வாக்குசாவடிகளில் பொருத்தப்பட்டிருந்தது. காலை 9 மணி நிலவரப்படி ஈரோடு தொகுதியில் 7.91 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. 11 மணி நிலவரப்படி 23.03 சதவீத ஓட்டுகளும், மதியம் 1 மணிக்கு 38.18 சதவீத வாக்குகளும், மதியம் 3 மணிக்கு 54 சதவீத ஓட்டுக்களும், மாலை 5 மணிக்கு 65.36 சதவீதம் பதிவாகி இருந்தது. ஈரோடு மக்களவை தொகுதியில் மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 72.67 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதன்படி ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 75.59 சதவீதமும், ஈரோடு கிழக்கு 67.38, ஈரோடு மேற்கு 68.90, மொடக்குறிச்சி 76.32, தாராபுரம் 73.13, காங்கேயம் 74.81 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

Related Stories: