பெங்களூருவில் இருந்து வந்தும் வாக்களிக்க முடியாத ஐடி பெண் ஊழியர்... தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதம்

சென்னை: சாலிகிராமத்தில் உள்ள செங்கராஜுலு தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (55). இவரும் இவருடைய குடும்பத்தினரும் நேற்று காலை அதே பகுதியில் உள்ள காவேரி உயர் நிலைப்பள்ளியில் வாக்களிக்க சென்றனர். அப்போது தேர்தல் அலுவலர், ஆனந்த் மட்டுமே வாக்களிக்க முடியும் என்றார். இதனால், தேர்தல் அலுவலரிடம் மற்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், தேர்தல் அலுவலர் பட்டியலில் உங்களது பெயர் இல்லை. எனவே ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி திருப்பி அனுப்பினார். இதனால், அதிர்ச்சிடைந்த மற்ற 3 பேரும் வேறுவழியின்றி வாக்கு அளிக்காமல் திரும்பி சென்றனர்.

இதேபோல் தேவி என்பவரின் பெயரும் பட்டியலில் இல்லை எனக்கூறி, வாக்களிக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால், அவர் தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுபற்றி அவர் கூறியதாவது: நான் பெங்களூருவில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். வாக்களித்து மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசையில்தான் வந்தேன். ஆனால், இங்கு வந்து நான் ஏமாற்றம்தான் அடைந்தேன். எங்கள் குடும்பத்தில் 3 பேருக்கு ஓட்டு இல்லை. ஏற்கனவே, என்னுடைய அம்மா எனக்கு ஓட்டு இருக்கிறது என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டு உறுதி செய்து என்னிடம் கூறினார். அதன்பின் தான் இங்கு வந்தேன். இப்போது, இங்கே வந்து பார்த்தபோது, எனக்கு ஓட்டு இல்லை என்று கூறுகிறார்கள். அதிகாரிகள் சரியாக பதில் அளிக்கவில்லை. அலட்சியமாக நடந்துகொள்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: