மோடியிடம் தமிழக அரசுதான் அடிமை என்றால் தேர்தல் ஆணையமும் அடிமையாகி விட்டது...வாக்களித்த பின் தயாநிதி மாறன் பேட்டி

சென்னை: மோடியிடம் தமிழக அரசுதான் அடிமையாக இருக்கிறது என்றால், தற்போது தேர்தல் ஆணையமும் அடிமையாகிவிட்டது என்று மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், நந்தனத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை 9.45 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். மேலும் அவரது தாய் மல்லிகா மாறன், மனைவி ப்ரியா தயாநிதி மாறன், மகள் திவ்யா தயாநிதி மாறன் ஆகியோரும் வாக்களித்தனர். அதேபோன்று அவரது மகள் திவ்யா தனது முதல் வாக்கை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்களித்த பின்னர் வெளியில் வந்த தயாநிதி மாறன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த நாள் முக்கியமான நாள். 5 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு பல்வேறு வேதனைக்குள்ளாக்கப்பட்டோம். மோடியின் ஆட்சியில் சிறந்த மாநிலமாக இருந்த தமிழ்நாடு முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டது. வாக்குறுதிகள் பல சொன்னாலும் அதை எதையுமே அவர்கள் நிறைவேற்றவில்லை. இந்த நிலை மாற வேண்டும். 2004ல் 40க்கு 40 வென்றோம். அப்போது பல திட்டங்கள் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

 2014ல் 37 எம்பிக்களை வைத்திருந்த அதிமுக எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. பாஜ அரசுக்கு அடிமையாகத்தான் இருந்தனர். அவர்கள் அடிமையாக இருக்கலாம். ஆனால் நாம் அடிமையாக இருக்க முடியாது. இந்த நிலை மாறி தமிழகம் தலை நிமிர வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று ராகுல்காந்தி மத்தியில் ஆள வேண்டும். அதைபோன்று வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராக வர வேண்டும்.  அப்போது தமிழகத்துக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும். வாக்கு பதிவு 100 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் வாக்கு பதிவு இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக பல்வேறு இடங்களில் பல மணி நேரம் தாமதமாக வாக்கு பதிவு தொடங்கியுள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் அலட்சிய போக்கை காட்டுகிறது. வெயில் காலத்தில் மக்கள் ஒரு மணி நேரம் நின்று வாக்களிப்பது என்பது சிரமமானது.  எனவே தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தான் மோடியிடம் அடிமையாக இருக்கிறது என்றால், தேர்தல் ஆணையமும் அவரிடம் அடிமையாகிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: