குப்பையில் வீசப்பட்ட பூத் சிலிப்கள்

திருவொற்றியூர்: வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர் தொகுதியில் உள்ள 74 மையங்களில் அமைக்கப்பட்ட 304 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கின. இதற்காக காலை 6 மணி முதலே ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 7 மணிக்கே பல இடங்களில் மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.ஆனால் ஒருசில வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேர்தல் அதிகாரிகள் செய்து தரவில்லை. மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வாக்களிக்க வரும்போது, அவர்கள் அமருவதற்கு இருக்கைகள் கூட ஏற்பாடு செய்யப்படவில்லை.தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று பூத் சிலிப்களை அலுவலர்கள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இந்த சிலிப்பை அதிகாரிகள் முறையாக வழங்கவில்லை.

இவ்வாறு விடுபட்ட வாக்காளர்களுக்கு அந்தந்த மையங்களில் வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், பல இடங்களில் சிலிப் வழங்கும் அதிகாரிகள் வராததால், வாக்காளர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதனால் பூத் சிலிப்பை திமுகவினரே பொதுமக்களுக்கு வழங்கினர். திருவொற்றியூர் ஜீவன்லால் நகரில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய பூத் சிலிப்கள், சாலையோர குப்பையில் வீசப்பட்டு கிடந்தது குறிப்பிடத்தக்கது.  கார்கில் நகரில் பூத் நம்பர் 53, வெள்ளையன் செட்டி மேல்நிலை பள்ளி பூத் நம்பர் 214, 227 ஆகிய வாக்குப்பதிவு மையங்களில் 2 வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் மக்கள் வாக்களிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

2.30 மணி நேரம் பாதிப்பு

திருவொற்றியூர் 1வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுக்குப்பம் பாகம் 69க்கான வாக்குச்சாவடி மையம், சென்னை நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டது. இங்கு, நேற்று மதியம் ஒரு மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மாலை 3.30க்கு பழுது சரி செய்யப்பட்டு, மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால், வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர்.

மை வைக்க மறந்த பணியாளர்கள்

பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று காலை தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனின் மனைவி தனது வாக்கை பதிவு செய்ய வந்தார். அவரிடம் சரியான ஆவணம் இல்லை என தேர்தல் பணியாளர்கள் அவரை திரும்பி அனுப்பினர். இழுபறிக்கு பிறகு அவரை வாக்கு பதிவு செய்ய அனுமதித்தனர். சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குழப்பம் அடைந்த தேர்தல் பணியாளர்கள் அந்த குழப்பத்தில் வெள்ளையன் மனைவியின் விரலுக்கு மை வைக்க மறந்து வாக்கு பதிவு செய்ய அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: