×

தஞ்சை பகுதியில் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு பல மணி நேரம் காத்திருந்து வாக்காளர்கள் வாக்களிப்பு

தஞ்சை, ஏப். 19: தஞ்சை பகுதியில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் பல மணி நேரம் காத்திருந்து வாக்காளர்கள் வாக்களித்து சென்றனர். தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே அருள்மொழிப்பேட்டை பகுதி உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடந்தது. காலை 9.15 மணி வரை 150 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதன்பின்னர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. காலை 11.45 மணி வரை இயந்திரத்தை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து அந்த இயந்திரத்தை சீல் வைத்து விட்டு புதிய இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அங்கிருந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் 11.45 மணிக்கு புதிய வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு துவங்கியது. இயந்திரத்தில் கோளாறு காரணமாக 2.30 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது.

அதேபோல் தஞ்சை கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் குறிச்சித்தெரு பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 846 வாக்குகள் உள்ளன. காலை 11.30 மணியளவில் 314 வாக்குகள் பதிவாகியிருந்தது. அப்போது இயந்திரத்தை சரி பார்த்தபோது மக்களவை உறுப்பினருக்கு 6 வாக்குகளும், சட்டமன்ற உறுப்பினருக்கு 10 வாக்குகளும் பதிவானதைவிட குறைவாக காட்டப்பட்டது. உடனடியாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தேர்தல் அதிகாரி சுரேஷ் அங்கு வந்து விசாரித்தார். அப்போது வாக்குப்பதிவு துவங்கும் முன் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதை நீக்கவில்லை. அதனால் இந்த குளறுபடி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் பதிவான இயந்திரத்தை சீல் வைத்து விட்டு புதிய இயந்திரத்தில் வாக்குப்பதிவு நடத்துவதாக தெரிவித்தார். இதையடுத்து புதிய வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு துவங்கியது. இதனால் ஒரு மணி நேரம் வாக்காளர்கள் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்தனர். அதேபோல் தஞ்சை வடக்குவாசல் நகராட்சி தொடக்கப்பள்ளி, யாகப்பா நகர் ஆக்ஸ்போர்ட் பள்ளி, தஞ்சை தெற்குவீதி வீரராகவா மேல்நிலைப்பள்ளி, தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் உள்ள அரசு சேவா சமாஜ் இல்லம் ஆகியவற்றில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 30 நிமிடம் வாக்குப்பதிவு நடக்கவில்லை.
பட்டுக்கோட்டை அடுத்த மன்னங்காடு தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  உள்ள வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு  வாக்குப்பதிவு துவங்கி 10 மணி வரை நடந்தது.

10.10 மணிக்கு வாக்குச்சாவடியில் உள்ள விவி பேடில் (வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு  ஓட்டு போட்டோம் என்பதை அவர்கள் மட்டும் 7 வினாடிகள் மட்டும் பார்க்கும்  இயந்திரம்) ஏதோ புகை, புகையாக வந்தது. அப்போது வாக்களித்த ஒரு பெண்  வாக்காளர், அருகிலிருந்த வாகுப்பதிவு அலுவலரிடம்  தெரிவித்தார். உடனே அவர் மண்டல துணை தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார்.  மண்டல துணை தாசில்தார் வேறு புதிதாக ஒரு விவி பேடு பட்டுக்கோட்டை  தாலுகா அலுவலகத்திலிருந்து கொண்டு வந்து  வாக்குச்சாவடியில் கொடுத்தார்.

Tags : polling stations ,area ,voters ,Tanjore ,
× RELATED மனநலம் பாதித்தவர் தாக்கியதில் 2 கண்களை...