மயிலாடுதுறை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் இயந்திரம் பழுதால் வாக்காளர்கள் அவதி கும்பகோணம் பகுதியில் பரபரப்பு

கும்பகோணம், ஏப். 19: மயிலாடுதுறை தொகுதிக்கு உட்பட்ட கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடியில்களில் இயந்திரங்கள் பழுதானதால் வாக்காளர்கள் அவதிப்பட்டனர். மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 287 வாக்குப்பதிவு மையங்களிலும், திருவிடைமருதூர் தொகுதியில் 291 வாக்குப்பதிவு மையங்களிலும் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் 2 பூத்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும்போதே வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. இதனால் மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு துவங்கியது. இதனால் மூன்றரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது. இதேபோல் சுந்தரபெருமாள்கோவில் அரசு பள்ளியில் செயல்பட்ட 2 வாக்குப்பதிவு பூத்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

கும்பகோணம் சிறியமலர் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததையடுத்து உடனடியாக சீர் செய்யப்பட்டது. இதேபோல் கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. 231வது வாக்காளர் தனது வாக்கை பதிவு செய்து கொண்டிருந்தபோது இயந்திரம் திடீரென பழுதானது. இதைதொடர்ந்து புதிய வாக்குப்பதிவு இயந்திரம் வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. இதனால் 3 மணி நேரம் வாக்குப்பதிவு செய்ய வந்த வாக்காளர்கள் வெயிலில் காத்திருந்தனர். கும்பகோணம் அடுத்த சோழபுரம் அரசு பள்ளியில் நடந்த வாக்குப்பதிவின்போது அமமுகவினர் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் அதிமுகவினருக்கும் அமமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு போலீசார் சென்று இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். மயிலாடுதுறை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கம், சீனிவாசநல்லூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

× RELATED தேனி தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளில்...