×

வாக்குப்பதிவு மையத்துக்குள் புகுந்து திமுக பூத் ஏஜென்டுகளை தாக்கி அதிமுகவினர் ரகளை 3 பேர் காயம்

தஞ்சை, ஏப். 19: தஞ்சை மகர்நோன்புசாவடி அருகே கண்டிராஜா அரண்மனை அமைந்துள்ளது. இந்த பகுதியில் தஞ்சை மாநகராட்சி வார்டு எண் 29 மற்றும் 30க்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையம், டிஎல்சி நடுநிலைப்பள்ளியில் உள்ளது. இந்த வாக்குப்பதிவு மையத்தில் நேற்று காலை முதல் திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை வாக்குப்பதிவு முடிவதற்கு முன் அதிமுகவினர் தங்களது சட்டைப்பையில் இரட்டை இலை சின்னத்தை பொருத்தி கொண்டு வாக்குப்பதிவு மையம் அருகே வாக்குகளை சேகரித்தனர். இதை திமுகவை சேர்ந்த பூத் ஏஜென்டுகள் தடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இருதரப்பினரையும்  சமாதானம்செய்தனர்.

இதைதொடர்ந்து அதிமுகவினர் தங்களது வார்டு செயலாளர்களிடம், திமுகவினர் தங்களை அவமானப்படுத்தி தகராறு செய்ததாக தெரிவித்தனர். உடனடியாக 29 மற்றும் 30 வார்டு பகுதியை சேர்ந்த அதிமுகவினர் வாக்குப்பதிவு மையத்துக்கு வந்தனர். அப்போது வாக்குப்பதிவு மைய வளாகத்தில் நின்று கொண்டிருந்த திமுக பூத் ஏஜென்டுகளை  வாக்குப்பதிவு மையத்தை விட்டு வெளியே வருமாறு கூச்சலிட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், வாக்குப்பதிவு மையத்தின் கேட்டை பூட்டி உள்ளே யாரும் வர அனுமதி இல்லையென தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி அதிமுகவினர் கேட்டை திறந்து கொண்டு வாக்குப்பதிவு மையத்துக்கு உள்ளே சென்று தகாத வார்த்தைகளால் பேசினர். இதனால் வாக்குப்பதிவு மையத்தில் இருந்த திமுக பூத் ஏஜென்டுகள் வெளியே வந்தவுடன் உருட்டுக்கட்டையால் அதிமுகவினர் தாக்கினர்.

இதில் தஞ்சை கீழவாசலை சேர்ந்த அமல்ராஜ் (30), செந்தில்குமார் (30), கருணாநிதி (32) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதில் அமல்ராஜக்கு மண்டை உடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்து திமுகவினர் திரண்டு வந்தனர். அதற்கு அதிமுகவினர் அங்கிருந்து தப்பியோடினர். அப்போது திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, தஞ்சை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நீலமேகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிழக்கு போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் செய்தனர்.

Tags : polling booth ,booth agents ,DMK ,
× RELATED சென்னை மாநகரப் பகுதியில் இன்று 565...