திருச்சியில் 2 வாக்குச்சாவடி மையத்தில் ஏற்பட்ட குளறுபடியால் பரபரப்பு காங்கிரஸ், தேமுதிக சின்னம் பொருத்திய வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றி வைப்பு கட்சியினர் திரண்டு மையத்தினை பூட்டினர்

திருச்சி, ஏப். 19:  திருச்சியில் 2 வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல், 2வதாக வைக்காமல் மாற்றி வைக்கப்பட்டிருந்ததால் காங்கிரஸ், தேமுதிகவினர் திரண்டு தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மையத்தினை பூட்டினர். கட்சியினரை கலைந்து செல்லக்கூறி துணை ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்த ஆயத்தமானதால் பரபரப்பு ஏற்பட்டது. தாசில்தார் சமாதானம் செய்ததால் பிரச்னை முடிவுக்கு வந்தது.

Advertising
Advertising

மக்களவை தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்புடன் நடந்தது. ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு அளித்தாலும் அதனை சரி செய்த பின் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் திருச்சி மக்களவை தொகுதியில் காங்கிரஸ், தேமுதிக, பகுஜன்சமாஜ் என தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 23 பேர் போட்டியிட்டனர். 2 வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் படம் சின்னம் மற்றும் நோட்டா என 24 படத்துடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மையத்தில் வைக்கப்பட்டது.

முதல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் காங்கிரஸ், தேமுதிக மற்றும் சுயேச்சை ேவட்பாளர்கள் 16 பேரும், 2வது வாக்குப்பதிவு இயந்திரத்தில் சுயேச்சையாக உள்ள அமமுக மற்றும் நோட்டா உள்ளிட்ட 8 வேட்பாளர்களின் படத்துடன் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் 8 மற்றும் 9வது வார்டுக்குட்பட்ட வாக்காளர்களுக்கு வாக்கு அளிக்க 10க்கும் மேற்பட்ட வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் காலை முதல் அமைதியாக நடந்த வாக்குப்பதிவில் மதியம் 1.30 மணிக்கு பிரச்னை வெடித்தது.

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்களில் ஒரு சிலர் 12 மற்றும் 16 வாக்குசாவடி மையத்தில் முதலாவதாக அமமுக வேட்பாளர் கொண்ட வாக்குப்பதிவு இயந்திரமும் 2வதாக காங்கிரஸ், தேமுதிக வேட்பாளர்கள் ெகாண்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்திருப்பதாக கட்சி நிர்வாகிகளிடம் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் சகாதேவபாண்டியன், திமுக முன்னாள் கவுன்சிலர் பன்னீர்செல்வம், வக்கீல் அந்தோணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் செந்தில்நாதன் உள்ளிட்ட கட்சியினர் பள்ளி வளாகத்தில் திரண்டனர்.

அங்கு 12 மற்றும் 16ம் எண் கொண்ட வாக்குச்சாவடி மைய தேர்தல் அலுவலரிடம் இது குறித்து கேட்டனர். அப்போது 16ம் எண் வாக்குச்சாவடி மைய தேர்தல் அலுவலர், என்னிடம் கூறிய அதிகாரிகள் இப்படித்தான் வைக்க சொன்னார்கள். உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த கட்சியினர் வாக்குச்சாவடி மைய அறையை பூட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வெளியில் இருந்த துணை ராணுவத்தினர் செய்வதறியாது திகைத்து நின்று மேலும் உள்ளே யாரும் செல்லாத வகையில் பாதுகாப்பு அளித்தனர்.

இதற்கிடையில் கட்சியினர் 12வது வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று அங்கு குளறுபடியாக வைக்கப்பட்டது குறித்து தேர்தல் அலுவலரிடம் கேட்டனர். அப்போது அங்கேயும் இதேபோல் பதில் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு நின்றிருந்த துணை ராணுவத்தினர் கட்சியினரை கலைந்து செல்லுமாறு கூறியும் கலையாததால் துப்பாக்கியை வானத்தை நோக்கி தூக்கி பிடித்து சுடப்போவதாக கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் பள்ளியில் பிரச்னை குறித்து தகவலறிந்த கிழக்கு தாசில்தார் சண்முகவேலன், துணை கமிஷனர் நிஷா, மயில்வாகனன் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாற்றி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்தனர். மேலும் கட்சியினர் தரக்குறைவாக பேசிய தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாசில்தாரிடம் புகார் அளித்தனர். புகாரை அடுத்து கலெக்டரை தொடர்பு கொண்ட தாசில்தார் 16ம் எண் வாக்குமைய தேர்தல் அலுவலர் மீது நடவடிக்ைக எடுக்க பரிந்துரைத்தார். மேலும் பள்ளி வளாகத்தில் குவிந்திருந்த கட்சியினரை வெளியேற்றினர். இதனால் மதியம் 2.30 மணி வரை இ.ஆர்.பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: