வாக்குப்பதிவு கருவிகள் பழுதான மையங்களில் நேரம் நீடிக்காததால் வாக்காளர்கள் கடும் அதிருப்தி

திருச்சி, ஏப்.19: வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு, அங்கொன்றும், இங்கொன்றுமாக சில பிரச்னைகள் இருந்தாலும் திருச்சி மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நேற்று நடந்து முடிந்தது. திருச்சி மக்களவை தொகுதியில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. திருச்சி மக்களவை தொகுதியில் 7,39,843 ஆண்கள், 7,68,972 பெண்கள், 148 திருநங்கைகள் என 15 லட்சத்து 8,963 வாக்காளர்கள் உள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் திருநாவுக்கரசர், அதிமுக கூட்டணியில் தேமுதிக இளங்கோவன், அமமுக சாருபாலா, மக்கள் நீதி மய்யம் ஆனந்தராஜா உள்பட 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

 வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு துவங்கியது. ஸ்ரீரங்கத்தில் 339, திருச்சி மேற்கில் 271, திருச்சி கிழக்கில் 258, திருவெறும்பூரில் 294, கந்தர்வக்கோட்டையில் 237, புதுக்கோட்டையில் 261 என திருச்சி தொகுதி முழுவதும் 1,660 வாக்குச்சாவடிகளில் மக்கள் காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக வாக்களித்தனர். 4,000க்கும் அதிகமான போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கொன்றும், இங்கொன்றுமாக சில இடங்களில் சிறுசிறு சலசலப்புகள் தான் ஏற்பட்டனவே தவிர, பெரிய பிரச்னை ஏதுமின்ற வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. அதே வேளையில் காலை 7 மணியிலிருந்து பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி நின்றதால், வாக்காளர்கள் சலிப்படைந்தனர்.

அவை சரி பார்க்கப்பட்ட பின் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். காலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதான பல வாக்குச்சாவடிகளில் மாலை வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சொன்னபடி நேரத்தை நீட்டிக்காமல் குறித்து வைத்தபடி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவை முடித்துக்கொண்டனர். பிராட்டியூரில் உள்ள மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் காலை 8 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவில்லை. இதனால் மாலை ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கபடும் என வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை நம்பி சென்ற பிராட்டியூர் காவேரி நகர் பத்மா என்ற பெண் மாலை வந்துள்ளார். அதேபோல பிராட்டியூரை சேர்ந்த அகிலாம்பாள் என்ற மூதாட்டியும் வந்தார். 6 மணிக்கே வாக்குச்சாவடி பூட்டப்பட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல தொகுதியில் திருப்பராய்த்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பழுதான வாக்குச்சாவடிகள் மாலை வரை நேரம் நீட்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: