செந்தண்ணீர்புரம் வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் அலுவலரின் செல்போன் அபேஸ் கேமரா பதிவை சோதனையிட போலீசார் முடிவு

திருச்சி, ஏப். 19:  திருச்சி செந்தண்ணீர்புரத்திலுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் அலுவலரின் செல்போன் மாயமானது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் சோதனை செய்ய முடிவெடுத்துள்ளனர். மக்களவை தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிவரை விறுவிறுப்புடன் நடந்தது. இதில் ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் அதனை சரி செய்து அதன்பின் காலதாமதமாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் செந்தண்ணீர்புரத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. கூட்டம் அதிகளவில் இருந்ததால் ஒவ்வொருவரின் பெயரை கூர்ந்து கவனித்து ஆய்வு செய்து பின்னரே வாக்கு மைய அலுவலர்கள் வாக்குப்பதிவிற்கு அனுமதி அளித்தனர்.

இந்நிலையில் வாக்கு மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சசிகலா என்பவர் தனது ஆன்ட்ராய்ட் செல்போனை டேபிளில் வைத்து வாக்களிக்கும் வாக்காளர்களின் பெயர்களை சரி செய்து வாக்களிக்க அனுமதித்தார். இதில் திடீரென டேபிளில் வைத்திருந்த அவரின் செல்போன் மாயமானது. உடனடியாக சிறிது நேரம் வாக்குப்பதிவை நிறுத்தி அங்கிருந்தவர்களிடம் சோதனை நடத்தினார். ஆனாலும் அவரின் செல்போன் கிடைக்கவில்லை. இதையடுத்து அங்கு வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் சோதனை செய்ய முடிவெடுத்துள்ளனர். இச்சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.

Related Stories: