மணப்பாறையில் பரபரப்பு இரட்டை இலைக்கு வாக்களித்து போட்டோ எடுத்து பேஸ்புக்கில் பகிர்வு தேர்தல் ஆணையம் சோதனையில் ஓட்டை

திருச்சி, ஏப்.19: மணப்பாறையில் ஒரு வாக்காளர் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்ததை போட்டோ எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி, கரூர் மக்களவை தொகுதிக்குள் வருகிறது. காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி, அதிமுக சார்பில் துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட 43 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு நேற்று நடந்தது. வாக்குச்சாவடிக்குள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பது தேர்தல் ஆணையம் உத்தரவு. ஆனால், மணப்பாறை, சின்னக்கடைவீதியை சேர்ந்த மணி என்ற புல்லட்மணி என்கிற இளைஞர்கள் வாக்குச்சாவடி ஒன்றில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்துவிட்டு அதை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் ‘ஒரு விரல் புரட்சி ஜனநாயக கடமையை நிறைவேற்றிய தருணம். இதுதான் நம்ம ஓட்டு’ என ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.இது தேர்தல் ஆணையத்தின் கவனக்குறைவையும், சோனையில் ஓட்டை விழுந்ததையும் காட்டுகிறது. தேர்தல் ஆணையம் கண்களில் மண்ணை தூவிவிட்டு இளைஞர் ஒருவர் தான் எந்த கட்சிக்கு வாக்களித்தேன் என்பதை போட்டோ எடுத்துச் சென்று சம்பந்தப்பட்ட கட்சியினரிடம் காட்டி, வாக்குக்கு பணம் வாங்கினாரா என்பது தெரியவில்லை. செல்பி எடுத்து போட்டால் சிறந்த செல்பிக்கு ரூ.7,000ம் பணம் தருவோம் என தேர்தல் ஆணையம் கூறியதை இந்த இளைஞர் தவறாக புரிந்து கொண்டாரோ என்னவோ? தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் தேர்தல் ஆணையத்துக்கு சாதகமாக இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்களால் பெரும் சவாலாக இருக்கின்றன.

Related Stories: