கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது வாக்கு எண்ணும் மையத்தில் 4,242 இயந்திரங்களுக்கு சீல்

சேலம், ஏப்.19:  சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட 4,242 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,169 வாக்குச்சாவடி மையங்களும், 3,288 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தது. இவற்றில் 243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டிருந்தது. இப்பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சேலம் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை, 593 வாக்குச்சாவடி மையங்களில் 1,803 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இவற்றில் 172 பதற்றமானவை என அறியப்பட்டது.

நேற்று காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. சேலம் மாவட்டத்தில் கருமந்துறை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் பகுடுப்பட்டு, மணியார்குண்டம் ஆகிய இடங்களில் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனை சரி செய்த பிறகு, கூடுதலாக 30 நிமிட நேரம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதே போல சேலம் மாநகரில், சூரமங்கலம் ராமலிங்க வள்ளலார் பள்ளியில் வாக்கு இயந்திரம் பழுதானதால் 7 மணி வரை வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 2,228,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், 4,242 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவற்றை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டுவந்தனர். இங்கு 3 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டது.  அதிகாலை வரையிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தது. அதன்பிறகு 3 அறைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதையடுத்து, 3 மையங்களுக்கும் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், 4 அடுக்கு பாதுகாப்பை அமைத்தார். 1 ஏடிஎஸ்பி, 1 உதவி கமிஷனர், 3 இன்ஸ்பெக்டர்கள் என 200 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர்.

முதல் அடுக்கில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், 2வது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 3வதுஅடுக்கில் ஆயுதப்படை போலீசார், 4வது அடுக்கில் உள்ளூர் போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இது 3 ஷிப்ட் ஆகும். இதையும் தாண்டி, வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் மேல் பகுதியில், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். அதே போல சங்ககிரி தொகுதி வாக்கு இயந்திரங்கள் நாமக்கல்லுக்கும், ேமட்டூர் தொகுதி வாக்கு இயந்திரங்கள் தர்மபுரிக்கும், ஏற்காடு, கெங்கவல்லி, ஆத்தூர் தொகுதி வாக்கு இயந்திரங்கள் கள்ளக்குறிச்சிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

கடந்த தேர்தலை போல்

வாக்குப்பதிவு

ேசலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், இடைப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு மற்றும் வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற ெதாகுதிகள் அடங்குகிறது. கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், சேலம் தொகுதியில் 76.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. அதற்கு அடுத்து 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில், 0.28 சதவீதம் அதிகரித்து, 76.73 சதவீதமாக வாக்குப்பதிவானது. இதேபோல், நேற்று

நடந்த தேர்தலில் 76.73 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

காலையில் விறு,விறு; மதியத்தில் மந்தம்

வாக்குப்பதிவு ஆரம்பித்த ஒரு சில மணி நேரங்களிலேயே, 30 சதவீதம் பேர் வாக்களித்து விட்டனர். ஆனால், மதிய வேளையில் வெயிலின் தாக்கம் காரணமாக, வாக்குப்பதிவின் வேகம் குறைந்தது. தொடர்ந்து மாலையில் மீண்டும் விறு,விறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. டெல்லியில் இருந்து வந்து வாக்களித்த இளைஞர் சேலம் மாவட்டம் விளாரிபாளையம் ராஜவீதியை சேர்ந்தவர் அலெக்ஸ்(25). இவர் அரியானா மாநிலம், குருகிராமில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில், ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக இருதினங்களுக்கு முன்பு சேலம் வந்த அவர் நேற்று, விளாரிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், தனது வாக்கினை பதிவு செய்தார். ‘உள்ளூரில் இருந்துகொண்ேட வாக்களிக்க வரமறுக்கும் இளைஞர்களுக்கு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் வகையில், ₹16 ஆயிரம் செலவிட்டு எனது வாக்கினை செலுத்த வந்தேன். நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு குடிமகனும் பங்காற்ற வேண்டும்,’ என அவர் தெரிவித்தார்.

Related Stories: