காலை முதல் விறுவிறுப்பாக நடந்த தேர்தல் சேலம் தொகுதியில் 76.73% வாக்குப்பதிவு

சேலம், ஏப்.19: சேலம் நாடாளுமன்ற தொகுதியில் காலையிலிருந்தே விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவில், 76.73சதவீதம் பேர் வாக்களித்தனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு, நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சேலம் தொகுதியை பொறுத்தவரை, 1,803 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு ெசய்யப்பட்டு, வாக்குப்பதிவு நடந்தது. முன்னதாக, காலை 6 மணிக்கு அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில், மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ெதாடர்ந்து, பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். காலை 6.30 மணி முதலே வாக்குச்சாவடிக்கு வர ெதாடங்கிய வாக்காளர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர். அதேசமயம், ஒருசில வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் ஆகியவை பழுதானதால், வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.

புதிதாக வாக்குரிமை பெற்ற இளம்தலைமுறை வாக்காளர்கள், ஆர்வமுடன் வந்து தங்களது ஜனநாயக கடமையாற்றினர். அதேபோல், வயதானவர்களும் உற்சாகத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு படையெடுத்தனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும், சாய்தள வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்பட்டன. அதன்படி, காலை 9 மணிக்குள் 7.28 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.

தொடர்ந்து, நண்பகல் 11 மணி நிலவரப்படி 18.32 சதவீதமும், மதியம் ஒரு மணி நிலவரப்படி 44.85 சதவீதமும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 54.66 சதவீதமும், மாலை 6 மணி நிலவரப்படி 76.73 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது. இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 76.73 சதவீதம் வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து, அனைத்து வாக்குச்சாவடிகளின் கதவுகளும் மூடப்பட்டன. பின்னர், அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவிபேட் கருவி ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

பின்னர், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் மூலம், வாக்கு எண்ணும் மையமான கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

சட்டமன்ற ெதாகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரம்: சட்டமன்ற தொகுதி வாரியாக பதிவான ஓட்டுக்கள் விவரம்

சேலம் நாடாளுமன்ற தொகுதிற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியிலும், மொத்தம் 16 லட்சத்து 11 ஆயிரத்து 982 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில், ஆண்கள் 6 லட்சத்து 38 ஆயிரத்து 283 பேரும், பெண்களில் 6 லட்சத்து 8 ஆயிரத்து 152 பேரும், மற்றவர்கள் 48 பேரும் என  மொத்தம்  12 லட்சத்து 46 ஆயிரத்து 483 பேர் ஓட்டு போட்டுள்ளனர். இது 77.39 சதவீதமாகும்

Related Stories: