ஓட்டுச்சாவடியில் மயங்கி விழுந்து ஓய்வு ஆசிரியர் உள்பட 2 பேர் சாவு

ஓமலூர், ஏப்.19சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகரை சேர்ந்தவர் சந்திரபோஸ்(68). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், நேற்று பிற்பகல் 3 மணியளவில் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குகை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டு போட வந்தார். அங்கு வாக்களித்து விட்டு வெளியில் நடந்து வந்த போது, பள்ளியின் முன்பு திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சந்திரபோசின் உடலை அவரது உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். ஓட்டு போட சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர், திடீரென இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

இதேபோல், ஓமலூர் அருகேயுள்ள பெரியேரிபட்டி கிராமம், வேடப்பட்டியைச் சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் கிருஷ்ணன்(74). இவர், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க, நேற்று காலை 10 மணிக்கு வந்தார். தனது வாக்கை பதிவு செய்த அவர், அங்கிருந்து நகர்ந்தார். அப்போது, திடீரென கிருஷ்ணன் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்த அலுவலர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்சிற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவரை பரிசோதித்து விட்டு கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அங்கு 15 நிமிடம் வாக்குப்பதிவு தடைபட்டது. அதன் பின்னர், தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது. ஓட்டு போடச் சென்ற இடத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: