ஜலகண்டாபுரம், இடைப்பாடியில் பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த மழை.

ஜலகண்டாபுரம், ஏப்.19:  ஜலகண்டாபுரம், இடைப்பாடி பகுதியில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஜலகண்டாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் 3 மணி முதல் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் பலத்தமழை பெய்தது. அப்போது, 5க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையோரம் இருந்த மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள் சேதமடைந்தது. இதனால், மின் கம்பங்கள் உடைந்து சேதமடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரங்கள் ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதேபோல், இடைப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்ட நிலையில், மாலை 4 மணிக்கு சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இடைப்பாடி மற்றும் பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், காசிகாடு, மூலப்பாறை, பாலிருச்சம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணி வரையிலும் சுமார் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. பலத்த காற்று மழைக்கு பூலாம்பட்டி பகுதியில் சுமார் 30 ஏக்கரில் பருத்தி மற்றும் வாழை பயிர் நாசமடைந்தது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 45 நாட்களுக்கு முன்புதான் பருத்தி பயிரிட்டிருந்தோம். காய் பிடிக்கும் தருவாயில், திடீரென பெய்த கோடை மழைக்கு பருத்தி செடிகள் அனைத்தும் அடியோடு சாய்ந்து விட்டது. இதேபோல், குலை தள்ளும் வேளையில் வாழை மரங்களும் நாசமாகியுள்ளது. இதன் சேதமதிப்பு சுமார் ₹20 லட்சம் இருக்கும். எனவே, வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: