எலிகளால் ஆண்டுக்கு ₹2,500 கோடி மதிப்புள்ள உணவு பொருட்கள் சேதம்

பள்ளிபாளையம், ஏப்.19:  ஆண்டுக்கு ₹2,500 கோடி மதிப்புள்ள உணவு தானியங்களை சேதப்படுத்தும் எலிகளை பிடித்தால், விவசாய உற்பத்தி அதிகரிக்குமென வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார். பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் அசோக்குமார் கூறியதாவது:
விவசாய நிலங்களில் காணப்படும் எலிகளால், தானிய உற்பத்தி பெரும் சேதமடைகிறது. சாதாரணமாக ஒரு எலி, தினமும் கால் கிலோ எடையுள்ள உணவு தானியங்களை சாப்பிடுகிறது. இது அதன் உடல் எடையைவிட அதிகம். எலிகள் உண்பதை விட, 30 மடங்கு அதிகமாக தானியங்களை சேதப்படுத்துகிறது. இனப்பெருக்கத்தில் எலிகள் மிகவும் வேகமானவை.

சாதாரணமாக ஒரு ஜோடி எலிகள் 18 மாதங்களில் பத்து லட்சமாக பெருகும் தன்மை கொண்டவை. எலிகள் 2 நாட்கள் தண்ணீரே குடிக்காமலும், 7 நாட்கள் உணவு இல்லாமலும் இருக்கும். எலிகளின் பற்கள் வேகமாக வளரும் தன்மை கொண்டவை. மாதம் ஒரு செமீ வீதம், ஆண்டுக்கு 12 செமீ வரை இதன் பற்கள் வளரும். இந்த வளர்ச்சியை தடுக்கவே எலிகள் எப்போதும் எதையாவது கொரித்துக்கொண்டே இருக்கும். எலிகள் கொரிக்காவிட்டால், அதன் பற்கள் வளர்ந்து, எதையும் சாப்பிட முடியாமல் பட்டினியால் மாண்டு போகும்.

ஒரு ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்களை எலிகள் வீணடிக்கின்றன. வயல் வரப்புகளில் உள்ள எலிகளை அழிக்க, ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதால் மண் நச்சுத்தன்மையாகிறது. இதை தவிர்க்க இயற்கையான முறைகளை பயன்படுத்தலாம். நொச்சி, எருக்கலை போன்ற செடிகளை வயல் வரப்பில் வேலிகளாக அமைக்கலாம். வயலில் தங்கஅரளி செடிகளை போட்டு வைத்தால் எலித்தொல்லை குறையும். வயல்களில் ஆந்தைகள், கருங்குருவிகள், காடைகள் அமர பறவை இருக்கை அமைத்து வைக்கலாம்.

இரவு நேரங்களில் இந்த இருக்கைகளில் அமர்ந்து, எலிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பறவைகள் அவற்றை உணவாக்கிக்கொள்ளும். வயலில் களிமண் சேறு கொண்ட பானைகளை, தரைமட்ட அளவில் பதித்து வைத்து, அதில் உணவுகளை வைத்தால், உணவுகளை எடுக்க வரும் எலிகள் பானையில் உள்ள பாதியளவு சேற்றில் சிக்கி அழிந்து போகும். அறுவடை முடிந்த பின்னர், விவசாயிகள் பலரும் ஒருங்கிணைந்த முறையில் தங்கள் வயல்களில் உள்ள எலி வளைகளை தோண்டியும், எலிகளை பிடித்து அழிக்கலாம்.

× RELATED மாவட்டத்தில் உணவு பொருட்களை பேப்பரில் சுற்றி வழங்கக்கூடாது