ஆம்பூர், குடியாத்தத்தில் பரபரப்பு அதிமுக, அமமுக மோதலால் போலீஸ் தடியடி வேட்பாளர் கார் கண்ணாடி உடைப்பு; 2 பேர் படுகாயம்

ஆம்பூர், ஏப்.19: ஆம்பூரில் அதிமுக மற்றும் அமமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் அமமுக வேட்பாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதில் 2 பேருக்கு மண்டை உடைந்தது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக அமமுக சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவான பாலசுப்பிரமணியம் போட்டியிடுகிறார். இவர் நேற்று மாலை தனது காரில் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து தெரிந்து கொள்வதற்காக சென்றார். அப்போது ஆம்பூர் கஸ்பா ‘பி’ பகுதி வாக்குச்சாவடிக்கு செல்ல கஸ்பா முத்தாலம்மன் கோயில் அருகே வந்தார். அப்போது அங்கிருந்த அதிமுகவினர் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அமமுக மற்றும் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். மேலும், அங்கிருந்த அதிமுகவினர் சிலர் பாலசுப்பிரமணியத்தின் கார் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது.இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் மற்றும் அதிரடிப்படையினர் அங்கு விரைந்து வந்தனர். மோதலில் ஈடுபட்டிருந்தவர்களை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், இரு தரப்பினரிடையே அடிதடி மற்றும் மோதல் தொடர்ந்ததால் போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை விரட்டி அடித்தனர். இதில் ஆம்பூரை சேர்ந்த டேவிட் மற்றும் சுதர்சன் ஆகியோருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும், சிலர் லேசான காயங்களுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க ஏதுவாக அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதேபோல் குடியாத்தம் சட்டப்பேரவை தனி தொகுதிக்கு உட்பட்ட கள்ளூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக கூட்டணி கட்சியான பாமகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் இருதரப்பை சேர்ந்த 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லத்தியை சுழற்றி அங்கிருந்தவர்களை விரட்டியடித்தனர். பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் இருதயராஜ் அங்கிருந்த இருதரப்பினரையும் விரட்டியடித்தார். இதனால் கள்ளூர் வாக்குச்சாவடியில் 25 போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது. இந்த மோதல் பிரச்னையால் அரைமணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இச்சம்பவங்களால் ஆம்பூர், குடியாத்தம் வாக்குச்சாவடி மையங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: