வருமானவரி துறை சோதனை நடத்தி எதிர்க்கட்சியினரை அடக்குவது சர்வாதிகார போக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி

வேலூர், ஏப்.19: வருமானவரித்துறை சோதனை நடத்தி எதிர்க்கட்சியினரை அடக்குவது சர்வாதிகார போக்குக்கு முதல் காரணமாக அமையும் என்று காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.அரக்கோணம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட காட்பாடி டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் திமுக பொருளாளர் துரைமுருகன், மனைவி சாந்தகுமாரியுடன் நேற்று காலை 9.30 மணியளவில் வாக்குப்பதிவு செய்தார். மேலும் அவரது மகனும் வேலூர் மக்களவை திமுக வேட்பாளருமான கதிர்ஆனந்த், அவரது மனைவி சங்கீதா ஆகியோரும் வாக்களித்தனர்.பின்னர், திமுக பொருளாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:தேர்தல் நேரத்தில் வருமான வரி ரெய்டு நடத்துவது அதிகார துஷ்பிரயோகம் என்பதை தவிர வேறு இருக்க முடியாது. நடுநிலையாக செயல்பட வேண்டிய சிபிஐ, வருமான வரித்துறையினரை பிரதமர் மற்றும் அவருக்கு கீழ் இருப்பவர்கள் இயக்கக்கூடாது. இதுவரை தேர்தல் காலங்களில் எதிர்க்கட்சியினர் மீது வருமான வரித்துறையை ஏவி அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது கிடையாது. இந்தியாவில் இதுதான் முதன்முறையாக நடந்துள்ளது.நிர்வாகம், நீதிமன்றம், சட்டமன்றம் ஆகிய 3ம் தனித்தனியாக இயங்க வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கம். தன்னிச்சையாக செயல்படும் சில நிர்வாகங்களையும் ஆளுங்கட்சி கையில் எடுத்துக்கொண்டு எதிர்க்கட்சியினரை அடக்குவது என்பது அது சர்வாதிகார போக்குக்கு முதல் காரணமாக அமைகிறது என்பது எனது கருத்து. இந்த போக்கு தவிர்க்கப்பட வேண்டும். தேர்தல் நடைபெறும்போது கூட ஒரு பக்கம் வாக்குப்பதிவும் மறுபக்கம் வருமான வரித்துறையும் போய் பார்ப்பது என்பது, இது ஜனநாயக நாடா? என்ற கேள்வியை எழுப்புகிறது. வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்ட விஷயத்தில் எல்லாமே முரண்பாடாகத்தான் இருக்கிறது. இதுதொடர்பாக எங்கு சொல்ல வேண்டுமோ? அங்கு சொல்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: