திருப்பத்தூர் அருகே நெகிழ்ச்சி வாக்களித்த 102 வயது முதியவரை மேளதாளத்துடன் வரவேற்ற சப்-கலெக்டர் தள்ளாத வயதிலும் நடந்தே வந்து

திருப்பத்தூர், ஏப்.19: திருப்பத்தூர் அருகே தள்ளாத வயதிலும் நடந்தே வந்து வாக்களித்த 102 வயது முதியவரை மேளதாளத்துடன் சப்-கலெக்டர் வரவேற்றார். திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் நேற்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த கந்திலி அருகே உள்ள கும்மிடிகான்பட்டி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி(102) என்பவர் வாக்களித்தார்.

அப்போது அங்கு ஆய்வுக்கு சென்ற சப்-கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மற்றும் தாசில்தார் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் தள்ளாத வயதிலும் நடந்தே வந்து வாக்களித்த முதியரை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, 102 வயதிலும் ஜனநாயக கடமை ஆற்ற வந்த முதியவர் பெரியசாமிக்கு மாலை அணிவித்து தாரை, தப்பட்டையுடன் வரவேற்றனர். இவருக்கு மனைவி, மகன்கள், மகள்கள் உள்ளனர்.இதுகுறித்து பெரியசாமி கூறுகையில், ‘நான் விவசாயக் கூலி தொழிலாளி. 21 வயதில் எனக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. அன்று முதல் மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல் என 50க்கும் மேற்பட்ட முறை வாக்களித்துள்ளேன். இந்த முறையும் நடந்து வந்து வாக்களித்துள்ளேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடவுள் என்னை அடுத்த தேர்தல் வருவதற்குள் உயிரோடு வைத்திருந்தால் நான் தவழ்ந்து வந்தாவது வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுவேன்’ என்றார்.

தொடர்ந்து, சப்-கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறுகையில், ‘வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த முதியவர் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார். 102 வயதில் தன்னுடைய ஜனநாயக கடமையாற்றிய இவரை நாங்கள் மனதார பாராட்டுகிறோம்' என்றார்.

Related Stories: