×

காரைக்காலில் காலதாமதமாக துவங்கிய வாக்குப்பதிவு

காரைக்கால், ஏப். 19: காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.  காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக காரைக்கால் மாவட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் 164 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 23 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு, சிசிடிவி கேமரா மற்றும் கூடுதல் போலீசாரோடு தீவிர கண்காணிப்பில் உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை, சாய்வுதளம், நிழல் பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.  வாக்குபதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, காலை 6.30 மணி முதல் பொதுமக்கள் வாக்குச்சாவடிகள் முன்பு காத்திருந்தனர். ஆனால் மாவட்டத்தின் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் 7.15 முதல் 7.30 வரை என சுமார் அரை மணி நேரம் காலதாமதமானது. இதனால் பொதுமக்கள் அவதியுற்றனர். காலை 7 மணி முதல் 11 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. வெயில் காரணமாக 11 மணிக்கு மேல் மந்தமானது. பிறகு மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் விறுவிறுப்பானது. மாவட்ட தேர்தல் பார்வையாளர் (பொது) பிரசன்னா ராமசாமி, மாவட்ட தேர்தல் அதிகாரி விக்ராந்த்ராஜா, துணை ஆட்சியர் ஆதர்ஷ், மாவட்ட எஸ்.எஸ்.பி ராகுல் அல்வால் மற்றும் பலர் பல்வேறு வாக்குச்சாவடிகளில் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

Tags : Voting ,district ,Karaikal ,
× RELATED 7 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி காரைக்காலில் ஆசிரியர்கள் போராட்டம்