தட்டாஞ்சாவடி ெதாகுதியில் மந்தமாக நடந்த வாக்குப்பதிவு

புதுச்சேரி, ஏப். 19:  புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒவ்வொருவரும் தலா 2 வாக்குகள் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்களில் வாக்குபதிவு மந்தமாக  நடைபெற்றது. இதனால் வாக்காளர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படவே அப்பகுதிக்கு வந்த மாவட்ட கலெக்டர் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டார். புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலுடன், தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலும் நேற்று நடைபெற்றது. இதில் பாக்குமுடையான்பேட் செல்வ விநாயகர் கோயில் அருகே உள்ள பூத்தில் ஆண்களும், பெண்களும் காலையிலே திரண்டு வந்து வாக்களித்தனர். ஒவ்வொருவரும் தலா 2 ஓட்டுகள் பதிவு செய்ததால் அங்கு காலதாமதம் ஏற்பட்டது. வயதான, நோயால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் அமர்வதற்கு எந்தவித ஏற்பாடும் செய்யப்படாத நிலையில் அங்கிருந்த பார்வையாளர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள கிளை நூலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வெகுநேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கும் மந்தமாக வாக்குபதிவு பணிகள் நடைபெற்றன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அருண், சட்டம்-ஒழுங்கு சீனியர் எஸ்பி அபூர்வா குப்தா ஆகியோர் அங்கு வந்து வாக்குசாவடியில் இருந்த பணியாளர்களிடம் விரைவாக வாக்குபதிவு நடத்த உத்தரவிட்டனர். அங்கிருந்த வாக்காளர்களிடம் இப்பகுதியில் ஒவ்வொருவரும் தலா 2 வாக்குகள் செலுத்த வேண்டியிருப்பதால் சற்று காலதாமதம் ஏற்படுவதாகவும், இதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என அங்கிருந்த வாக்காளர்களிடம் கலெக்டர் தெரிவித்தார். மாலை 6 மணிக்கு முடியும் வாக்குபதிவு நேரத்தின்போது எத்தனை பேர் வரிசையில் இருந்தாலும் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு செலுத்த வழிவகை செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதேபோல் தட்டாஞ்சாவடி தொகுதியில் மேலும் சில இடங்களில் மந்தமாக வாக்குபதிவு நடைபெற்ற நிலையில் அப்பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு பணிகளை வேகப்படுத்தினர். இத்தொகுதியில் 13,848 ஆண் வாக்காளர்கள், 15,469 பெண் வாக்காளர்கள், 3ம் பாலினத்தவர் 3 பேர் என மொத்தம் 29 ஆயிரத்து 320 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நேற்று மதியம் பிரபல அரசியல் கட்சிகள் போட்டா போட்டியுடன் பண பட்டுவாடாவில் ஈடுபட்டனர். அதிகபட்சமாக ஒரு வாக்குக்கு ரூ.1,500 வரை பணம் வழங்கப்பட்டுள்ளதால் அந்த தொகுதி வாக்காளர்கள் குஷியில் உள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: