வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 3 பேர் கைது

புதுச்சேரி, ஏப். 19: புதுச்சேரி மக்களவை தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. வாக்குப்பதிவு நாளான நேற்று, தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட ஏர்போர்ட் சாலை கைலாஷ்நகர் ஜீவா காலனியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற பாக்கமுடையான்பேட் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை தேர்தல் பறக்கும்படை அதிகாரி தேவசேனாதிபதி நேற்று அதிரடியாக பிடித்தார். பின்னர், கோரிமேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.30 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், தர்மாபுரி திரவுபதியம்மன் ேகாயில் அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற தர்மாபுரியை சேர்ந்த பாஜக பிரமுகர் கோவிந்தராஜ் என்பவரை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.10,100 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் நேற்று நெசவாளர் குடியிருப்பு பகுதியில் ரோந்து சென்றபோது, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற சண்முகாபுரத்தை சேர்ந்த என்ஆர் காங்., பிரமுகர் நாராயணசாமி என்பவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.5,400 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: