போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விடுமுறை பேருந்து வசதி இல்லாததால் வாக்குப்பதிவு குறைந்தது

திருக்கோவிலூர், ஏப். 19: தமிழகத்தின் பல்வேறு நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் இருந்து சாப்ட்வேர் நிறுவனங்கள் மற்றும் கூலி வேலைகளுக்கு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு வேலைக்கு சென்றுள்ளனர். இவர்கள் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு தங்களது சொந்த ஊருக்கு திரும்புவர். அதேபோல் சட்டமன்ற, மக்களவை தேர்தல், உள்ளாட்சி அமைப்பு தேர்தல் ஆகியவற்றின்போது தங்கள் சொந்த ஊருக்கு வந்து வாக்களித்து விட்டு செல்வார்கள். இதற்கு ஏதுவாக அப்பகுதிகளில் இருந்து தடையற்ற போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கும். இந்த நிலையில், இந்த மக்களவை தேர்தலில் போக்குவரத்து தொழிலாளர்களும் விடுமுறை எடுத்துக்கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் போக்குவரத்து தொழிலாளர்கள் கணிசமான நபர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு வாக்களிக்க தங்களது சொந்த ஊருக்கு வந்து விட்டனர். இதனால் பேருந்து வசதி இல்லாமல் வாக்களிப்பதற்காக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் முதல் கூலி வேலை செய்பவர்கள் வாக்களிப்பதற்காக தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கே தவித்தனர். இருந்த போதிலும் சிலர் மட்டுமே ஆம்னி பஸ்களிலும், சில தனியார் பஸ்களிலும் அதிக கட்டணம் கொடுத்து வாக்களிப்பதற்கு தங்கள் சொந்த ஊருக்கு மிகுந்த தாமதத்துடனே வந்தனர். பெரும்பாலானோர் சரியான பேருந்து கிடைக்காததாலும், பன்மடங்கு கூடுதல் கட்டணம் கொடுத்து ஏன் செல்ல வேண்டும் என்ற மனநிலைக்கு மாறி அவர்கள் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்லாமல் இருந்துள்ளனர். இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்கவும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும், தடையற்ற போக்குவரத்து அவசர அத்தியாவசியம் கருதி மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் போக்குவரத்து ஊழியர்களுக்கும் தபால் வாக்குகளை அளித்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது என சமூக ஆர்வலர்கள் கூறினர்.

Advertising
Advertising

Related Stories: