100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பேராவூரணி, ஏப்.18: பேராவூரணி வேளாண்மை கோட்டத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள் 100 சத மானியத்தில் பெற்று பயனடையுமாறு பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி கேட்டுக்கொண்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஆறு மாத காலமாக மழை பெய்யாததால்  வறட்சியான வானிலை நிலவும் இக்காலகட்டத்தில் நீரை நாம் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பேராவூரணி பகுதியில் கடும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த தருணத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடியை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் பொருட்டு வேளாண்துறை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வறட்சியான காலம் மட்டுமின்றி எப்பொழுதுமே நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

பேராவூரணி வட்டாரத்தில் சுமார் 6,250 எக்டரில் தென்னையும், 500 எக்டர் அளவில் நிலக்கடலையும், 200 எக்டரில் உளுந்து பயிரும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கண்ட பயிர்களுக்கு நீர்மேலாண்மை மேற்கொள்ள சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனமே சிறந்த முறையாகும். சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் விரையமாகாமல், பயிரின் வேர் பகுதிக்கு நேரிடையாக வழங்கப்படுவதால் குறைந்த நீர் தேவையே போதுமானது. மேலும் கரையும் உரங்களையும் பயிருக்கு நேரிடையாக வழங்க இயலும்.

தென்னை, எண்ணெய்பனை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்திட சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியத்திலும் வேளாண்துறை மூலம் சொட்டுநீர் பாசன கருவிகள் சிறந்த நிறுவனங்கள் மூலம் அமைத்து தரப்படுகின்றது. சொட்டுநீர் பாசனத்தின் மூலம் மட்டுமே தென்னை மரங்களை வறட்சியின் பிடியில் இருந்து காப்பாற்ற முடியும். எனவே பேராவூரணி பகுதியில் சொட்டு நீர் பாசனம் அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், நில வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, ரேசன்கார்டு, சிறு குறு விவசாயிகள் சான்று ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரையோ அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: