மக்காச்சோள பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை

சேதுபாவாசத்திரம், ஏப்.18: சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ( பொ) மாலதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மக்காச்சோள பயிரை தாக்கும் பூச்சிகளில் மிக முக்கமானது தண்டு துளைப்பான், கதிர் துளைப்பான் மற்றும் வேர் கருகல் நூற்புழு ஆகும். தண்டு துளைப்பான் தாக்கிய பயிர்களில் இலைகள் சுரண்டபட்டிருக்கும், நடுக்குருத்து வாடி காய்ந்து இருக்கும். தண்டில் துவாரம் காணப்படும். இவற்றை கட்டுப்படுத்திட விதைத்த 16வது நாள் குயினல்பாஸ்.5ஜி 6கிலோ அல்லது கார்பரில்.4ஜி 8கிலோ குருணை மருந்தினை 20 கிலோ மணலுடன் கலந்து ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள செடியின் நடுக்குருத்தில் இடவேண்டும்.

குருணை இட தவறும் பட்சத்தில் விதைத்த 20வது நாள் குயினல்பாஸ்25 இ.சி 400 மில்லி அல்லது கார்பரில் 50 சத நனையும் தூள் 400 கிராம் மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் பரப்பில் தெளிக்கவேண்டும். தண்டு துளைப்பான் மட்டுமின்றி மூக்குவண்டு மற்றும் அசுவினி பூச்சிகளும் கட்டுப்படுகிறது. வேர்கருகல் நூற்புழு தாக்கினால் இளம்செடிகள் கருகி காய்ந்துவிடும். இதனை கட்டுப்படுத்த கார்போபியூரான்.3ஜி குருணை மருந்து 12 கிலோவினை ஒரு ஏக்கர் பரப்பில் நடவு குழியில் விதையுடன் இடவேண்டும். கதிர் துளைப்பான் தாக்குதலால் பால் பருவ மணிகள் சேதமடைந்திருக்கும். இதனை கட்டுப்படுத்திட கார்பரில் 10 சத மருந்து 10 கிலோ அல்லது கார்பரில் 50 சத நனையும் தூள் மருந்து 400 கிராம் இவற்றில் ஏதேனும் ஒன்றினை பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் பின்பு 15 நாட்கள் கழித்து ஒரு முறையும் ஒரு ஏக்கர் பரப்பில் தெளிக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: