தஞ்சை மாவட்டத்தில், நகர்ப்புறங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

தஞ்சை, ஏப்.18: தஞ்சை மாவட்டத்தில் கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகர்புறங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. தேர்தல் பணியில் அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் ஆங்காங்கு குடிநீர் பிரச்னை எழுந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் காவிரியிலிருந்து 21 கிளை ஆறுகளும், வெண்ணாற்றிலிருந்து 15 கிளை ஆறுகளும் பிரிந்து ஓடுகின்றன. இந்த கிளை ஆறுகளிலிருந்து 28 ஆயிரத்து 376 ஏ, பி, சி, டி பிரிவு வாய்க்கால்கள் பிரிந்து ஓடுகின்றன. கல்லணைக் கால்வாய் மற்றும் அதிலிருந்து 327 கிளை வாய்க்கால்கள் பிரிகின்றன. இதன் மொத்த நீளம் 148 கி.மீ. ஆகும்.

இது தவிர தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதியில் 764 ஏரி மற்றும் குளங்கள் அமைந்துள்ளன. வழக்கமாக ஜனவரி 28ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டால் மார்ச் மாதம் 2வது வாரம் வரை ஏரி, குளங்கள் மற்றும் கிளை ஆறுகளில் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும். இது குளிப்பதற்கும், கால்நடைகள் குடிக்கவும் பயன்படும். ஆனால் இந்த ஆண்டு ஏரி, குளங்கள், கிளை ஆறுகளின் தாழ்வான இடங்கள் ஜனவரி மாதத்திலேயே வறண்டுபோய்விட்டன. போதிய மழை இல்லாததால் முழு ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டவில்லை.
Advertising
Advertising

இதனால் கால்நடைகள் கூட குடிக்க நீரின்றி தவிக்கின்றன. இன்னும் கோடை நெருங்க நெருங்க மக்களும் குடிநீருக்கு அல்லாட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புறம் மட்டுமின்றி தஞ்சை மாநகரிலும் குடிநீர் பிரச்னை தலை தூக்க ஆரம்பித்துவிட்டது. கடந்த 40 ஆண்டுகளாக தஞ்சை நகர மக்களின் குடிநீர் தேவையை கொள்ளிடம் குடிநீர் திட்டம் பூர்த்தி செய்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடத்தில் பெரும்வெள்ளம் வந்தபோது திருமானூர் கரையை ஒட்டி அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணற்றிலிருந்து தஞ்சைக்கு நாள்தோறும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் எடுத்து வரும் பிரதான குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தஞ்சை நகராட்சிக்கு சுமார் ரூ.11 கோடி நிதி ஒதுக்கி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 800 மீட்டர் நீளத்திற்கு உயர்மட்டம் பாலம் அமைக்கப்பட்டு அதில் பிரதான குழாய்கள் பொருத்தப்பட்டு குடிநீர் எடுத்து செல்லப்பட்டது.

தற்போதும் இதன் வழியாக நீர் ஊற்று மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு தஞ்சைக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் தற்போது கொள்ளிடத்திலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாலும், கூட்டு குடிநீர் திட்டங்கள் கூடுதலாக அமல்படுத்தப்பட்டு வருவதாலும் தஞ்சை மாநகர பகுதிக்கு விநியோகிக்கும் குடிநீர் அளவு கணிசமான அளவு குறைந்துவிட்டது. எனினும் பொதுமக்கள் ஆங்காங்கு வார்டு பகுதிகளில் போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறு மூலம் நிலைமையை சமாளித்து வருகின்றனர். இந்நிலையில் மேட்டூரில் அணையிலும் போதி நீர் இருப்பு இல்லாத காரணத்தால் நடப்பாண்டு ஜூன் மாதம் அணை திறப்பதற்கான சாத்திய கூறு இல்லாத நிலை உள்ளது. இதனால் குடிநீர் பிரச்னை இன்னும் சில மாதங்கள் நீடிக்கும் அபாயம் உள்ளது. தற்போது தேர்தல் நேரம் என்பதால் அரசும், அதிகாரிகளும் தேர்தல் பணியில் மும்முரமாக உள்ளனர்.உடனடியாக குடிநீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: