திருச்சியில் தேர்தலுக்கு அனைத்தும் தயார்: 100 சதவீதம் வாக்களிக்க கலெக்டர் வேண்டுகோள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தன தேவையான 81 பொருட்கள் அனுப்பி வைப்பு

திருச்சி, ஏப்.18:  திருச்சி மக்களவை தொகுதிக்குப்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்களை மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணியை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருச்சி கலெக்டர் சிவராசு கூறியதாவது: திருச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,660 வாக்குச்சாவடி மையங்களுக்கு 3,320 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், 1,660 மின்னணு வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவியும், 1,660 வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவியும் (விவி-பாட்), அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு, மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏதேனும் பழுதுகள் ஏற்பட்டால் அதற்கு மாற்றாக 673 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், 374 மின்னணு கட்டுப்பாட்டு கருவியும், 516 யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவியும் (விவி-பாட்) கையிருப்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் திருச்சி (கிழக்கு) தொகுதிக்கு திருச்சி மாநகராட்சியின் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்திலிருந்தும், மற்ற தொகுதிகளுக்க அந்தந்த தாலுகா அலுவலகத்திலிருந்தும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடிக்கு தேவையான வாக்காளர் பட்டியல், பேப்பர், பேனா, பென்சில், ரப்பர், மெழுகுவர்த்தி, நூல்கண்டு, உள்ளிட்ட 81 வகையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சீட்டு (பூத் சிலிப்) விஏஓ மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் வைத்து வாக்களிக்க இயலாது. வாக்காளர் அடையாள அட்டை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். வாக்குப்பதிவானது நாளை (இன்று) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு வாக்காளரும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு வாக்களிப்பது அவர்களின் உரிமை மற்றும் கடமையும் ஆகும். மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்.

வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், வாக்குச்சாவடிக்குச் சென்று எளிதாக வாக்களிப்பதற்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வுதளம் அமைக்கப்பட்டு சக்கர நாற்காலியும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாய்வு நாற்காலியை இயக்க மாவட்டத்தில் உள்ள 1,092 வாக்குச்சாவடிகளிலும் தன்னார்வத் தொண்டர்கள் தலா ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளில் குடிநீர் வசதி, மின்சார வசதி, மின்விசிறி வசதி, கழிப்பறை வசதி போன்ற அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: