சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிவிரைவு படை பாதுகாப்பு: கலவரத்தை தடுக்க ரோந்து பணி தீவிரம்

சென்னை: சென்னையில் பதற்றம் மற்றும் மிக பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் அதிவிரைவு படையினர் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கலவரங்களை தடுக்கும் வகையில் துணை கமிஷனர்கள் தலைமையில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்கு பதிவு நடக்கிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில் 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் சிறப்பு கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களின்படி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் கூடுதல் கமிஷனர் தினகரன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் சென்னை முழுவதும் 144 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழைய குற்றவாளிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்றப்பின்னணி உள்ள நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதேபோல், சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைதேர்தல் நடைபெறும் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையங்களில் நேற்று இரவே வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் அதற்கான உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு இன்ஸ்பெக்டர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் தடையின்றி ஓட்டு போடும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் போர்க்கால  அடிப்படையில் சென்னை மாநகர காவல் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் 393 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதில் 157 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவையாக கண்டறியப்பட்டு அங்கு, துணை கமிஷனர் தலைமையில் அதி விரைவுப்படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதேனும் நடந்தால் அதை கட்டுப்படுத்தும் வகையில் 10 சிறப்பு குழுக்கள் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Related Stories: