முகவர்களை நியமிப்பதில் தகராறு அதிமுக நிர்வாகிகளிடையே மோதல்

புழல்: சோழவரம் ஒன்றியத்தில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவின்போது புதிய முகவர்கள் நியமனம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் இடையே நேற்று கைகலப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாடியநல்லூர் பகுதியில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் புதிய முகவர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து, பாடியநல்லூர் தேர்தல் பணிமனையில் நேற்று காலை அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை நடைபெற்றது.

Advertising
Advertising

இந்த கூட்டத்தில் சோழவரம் ஒன்றிய செயலாளர் கார்மேகம், கிளை செயலாளர் மாணிக்கம், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ராஜேந்திரன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது புதிய முகவர்கள் நியமனத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால், அதிமுக நிர்வாகிகளிடையே காரசார விவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அதிமுக நிர்வாகிகளிடையே நடைபெற்ற வாக்குவாதம், கைகலப்பு காட்சிகள் தற்போது பல்வேறு சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி வருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் வேட்பாளர்களும் கலக்கத்தில் உள்ளனர். எனவே இது சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை சமரசப்படுத்தும் முயற்சியில் முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: