×

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

புதுச்சேரி, ஏப். 18: புதுச்சேரி, காரைக்காலில் 16 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (19ம்தேதி) வெளியாகிறது. தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 1ம்தேதி தொடங்கி 19ம் தேதி முடிவுற்றது. புதுச்சேரியில் மொத்தம் 16,415 பேர் பிளஸ்2 தேர்வு எழுதினர்.புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் 44 அரசு, 87 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 12,561 மாணவர்களும், 1,184 தனித்தேர்வர்களும் பிளஸ்2 தேர்வினை எழுதினர். காரைக்காலில் 10 அரசு மற்றும் 13 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 2,398 மாணவர்களும், 266 தனித்தேர்வர்களும் பிளஸ்2 தேர்வினை எழுதினர். ஏற்கனவே நடைமுறையில் இருந்த 1,200 மதிப்பெண்களுக்கு பதிலாக இந்தாண்டு மொத்தம் 600 மதிப்பெண்கள் (6 பாடங்கள்- தலா 100) என்ற அடிப்படையில் பிளஸ்2 தேர்வு நடத்தப்பட்டது. தமிழ், ஆங்கிலப் பாடங்களில் 2 தாள்கள் முறை நீக்கப்பட்டு ஒரே தேர்வாக நடைபெற்றன.
 தேர்வுகள் முடிந்தவுடன் உடனடியாக பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் ஏற்கனவே தமிழக தேர்வு துறை அறிவிப்பிற்கிணங்க தமிழகம், புதுவையில் நாளை (19ம்தேதி) பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படுகிறது.    அதேபோன்று, மார்ச், ஜூன் மாதங்களில் நடந்த பிளஸ் 1 தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019ல் எழுதினர். மேற்கண்ட இரண்டு தேர்வுகளுக்குமான முடிவுகளும் நாளைய தினம் வெளியாகிறது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு இன்று நடைபெறும் நிலையில் பிளஸ்2 தேர்வு ரிசல்ட் தேதியை மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டு புனித வெள்ளியன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று திட்டவட்டமாக கல்வித்துறை அறிவித்தது. அதன்படி நாளை பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது. தமிழக தேர்வுத் துறையின் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in இணையதள முகவரியிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ்2ல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிளஸ்1ல் ஏதேனும் ஒரு பாடம் தேர்ச்சி பெறவில்லை என்றால் அதை எழுதி தேர்ச்சி பெறும்வரை மதிப்பெண் சான்றிதழ் பெற முடியாது. இதன்மூலம் அந்த மாணவர் கல்லூரியில் உயர்கல்வி சேர முடியாத நிலை ஏற்படும்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...