சோளிங்கரில் கோலாகலம் லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோளிங்கர், ஏப்.18: சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக விளங்குவது சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். 1305 படிகள் கொண்ட பெரிய மலை மீது யோக நிலையில் நரசிம்மர் அருள் பாலிக்கிறார். 450 படிகள் கொண்ட சிறிய மலை மீது யோக ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார்.இந்நிலையில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சித்திரை பிரமோற்சவம் கடந்த 11ம் தேதி பெரிய மலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம் அனுமந்த வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து, நேற்று பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு உற்சவர் தேவி பூதேவி சமேத பக்தோசித பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 7.30 மணிக்கு தொடங்கிய தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் ‘‘கோவிந்தா கோவிந்தா’’ என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்ந்து, நாளை குதிரை வாகனமும், 19ம் தேதி வேடுபறி விழாவும், இரவு தீர்த்தவாரியும், 20ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெற உள்ளது.இதைத்தொடர்ந்து 3 நாட்கள் விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 24ம் தேதி திருமஞ்சனம், கண்ணாடி பல்லக்கு உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் மோகனசுந்தரம் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் சித்திரை தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த தேவி பூதேவி சமேத பக்தோசித பெருமாள்.

Related Stories: