மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வீல்சேர் அனுப்பி வைப்பு

திருப்பூர், ஏப். 17:   மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி மையங்களுக்கு சக்கர நாற்காலி நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.  மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் நாளை (18ம் தேதி) நடக்கிறது. அதற்கான ஆயத்த பணியில், தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கென இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள மொபைல் ஆப்பில் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பெயர், இடமாற்றம் மற்றும் சக்கர நாற்காலி தேவையெனில் அதனை இந்த ஆப் மூலம் தெரிவித்தால், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Advertising
Advertising

  மேலும் வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், மின்சாரம், மாற்றுத்திறனாளிகள் சென்று வாக்குப்பதிவு செய்ய சாய்வுதளம், தேவையான அளவு சக்கர நாற்காலி ஆகிய வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வையற்றோர் வாக்களிப்பதற்கு வசதியாக பிரெய்லி முறையினையும் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக திருப்பூர் மக்களவை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 1,704 வாக்குச்சாவடி மையங்களுக்கும் சக்கர நாற்காலி அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: