உங்களில் ஒருவனாக நினைத்து எனக்கு வாக்களியுங்கள்

ஈரோடு, ஏப்.17: உங்களில் ஒருவனாக நினைத்து எனக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்யுங்கள் என ஈரோட்டில் நடந்த இறுதி கட்ட வாக்குசேகரிப்பில் திமுக கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்தி பேசினார்.

ஈரோடு மக்களவை தொகுதியின் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் அ.கணேசமூர்த்தி ஈரோட்டில் நேற்று காலை பன்னீர்செல்வம் பார்க், அகில்மேடு வீதி, சின்னமார்க்கெட், ஈஸ்வரன்கோயில் வீதி, ஆர்கேசி ரோடு, நேதாஜி மார்க்கெட், கச்சேரி வீதி உள்ளிட்ட மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று இறுதி கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:மத்தியில் ஆளும் மோடி அரசு தமிழகத்தை கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் வஞ்சித்து வந்துள்ளது. இதை தட்டிக்கேட்க வேண்டிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, மோடிக்கு ஊது குழலாக இருந்து வருகிறது. தமிழகத்தின் நலன்கள் எல்லாம் பறிபோய்விட்டது. தந்தை பெரியார், அண்ணா ஆகியோர் சமூக நீதி காக்க பாடுபட்ட தலைவர்கள். ஆனால், அந்த சமூகநீதி இன்று பெரிய அச்சுறுத்தலில் சிக்கி கொண்டுள்ளது.
Advertising
Advertising

மத்தியில் தற்போது நீடித்து வரும் பாசிச ஆட்சி தொடர்ந்து நீடித்தால் சமூகநீதி குழிதோண்டி புதைக்கப்பட்டு விடும் என்பதில் சந்தேகம் இல்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் தேவை. எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்யுங்கள்.நான் ஏற்கனவே எம்பியாக இருந்தபோது ஈரோடு மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் வாங்கிக்கொடுத்தேன். தொகுதி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளேன். கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான நபராக இருந்து சேவையாற்றி உள்ளேன்.தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அரசின் திட்டப்பணிகளில் ஒரு நாளும் கமிஷன் வாங்கியது கிடையாது. கடைசி வரை நேர்மையாக இருப்பேன். உங்களில் ஒருவனாக நினைத்து என்னை வெற்றி பெறச்செய்யுங்கள்.இவ்வாறு கணேசமூர்த்தி பேசினார்.

Related Stories: