ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

ஈரோடு, ஏப். 17:  ஈரோடு மாவட்டத்தில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை ஈரோடு கலெக்டர் கதிரவன் நேற்று ஆய்வு செய்தார். மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்ல 186 வாகனங்களும், வாக்குசாவடிகளுக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்ல கூடுதல்  வாகனம் என மொத்தம் 372 வாகனங்கள் ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. இதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லும் 186 வாகனங்களுக்கும் நேற்று காலை ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்பட்டது. இப் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கதிரவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மக்களவை தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் 9 ஆயிரத்து 238 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த இயந்திரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் சுழற்சி முறையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் வாக்குப்பதிவிற்காக எடுத்து செல்ல ஒரு மண்டலத்திற்கு ஒரு வாகனம் என 186 மண்டலத்திற்கு 186 வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வாகனத்தில் தலா ஒரு மண்டல அலுவலர், மண்டல உதவி அலுவலர், மண்டல அலுவலக உதவியாளர் என 3 பேர், பாதுகாப்புக்கு ஒரு போலீஸ் என 4 பேருடன் வாகனம் அனுப்பி வைக்கப்படுகிறது.இந்த வாகனத்தோடு செல்லும் மற்றொரு வாகனத்தில் வாக்குப்பதிவிற்கு தேவையான எழுது பொருட்கள், படிவங்கள், சாக்கு பை, மை டப்பா உள்ளிட்ட பொருட்கள் இருக்கும். ஒரு மண்டலத்திற்கு இரண்டு வாகனங்கள் என 372 வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த இரண்டு வாகனங்களும் ரூட் மேப் படி வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று வாக்குச்சாவடி முதன்மை அலுவலரிடம் ஒப்படைக்கப்படும். இதில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லும் 186 வாகனங்களில் மட்டும் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனம் முறையான பாதையில் செல்கிறதா? என்பதை ஜிபிஆர்எஸ் மூலம் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertising
Advertising

Related Stories: