மக்களவை தேர்தல் முன்னிட்டு ஆளும்கட்சியினர் பெட்டி பெட்டியாக மதுபாட்டில் வாங்கி பதுக்கல்

திருப்பூர், ஏப். 16: திருப்பூர் மாவட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி டாஸ்மாக் நிர்வாகம் ஆளும்கட்சி பிரமுகர்களுக்கு சட்ட விரோதமாக மது பாட்டில்களை பெட்டி, பெட்டியாக வழங்கியுள்ளதால் பல்வேறு மதுபானக்கடைகளில் மதுபானத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  திருப்பூர் மாவட்டத்தில் 260க்கும்  மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடைகள் இயங்கி வருகிறது. மக்களவை தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கறி விருந்து, மதுபானம் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். இதனால், கடந்த ஒரு மாதமாக மதுபானம் விற்பனை பல கோடிக்கு அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18 ம் தேதி  நடப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு  நாளை முதல் 18 ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்கூட்டியே மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துள்ளனர். இதில், ஆளும்கட்சி பிரமுகர்களுக்கு திருப்பூர் டாஸ்மாக் நிர்வாகம் முன்னுரிமை வழங்கி கூடுதல் மதுபானங்களை பெட்டி,பெட்டியாக வழங்கியுள்ளது. சில இடங்களில் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி மொத்தமாக சரக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.  திருப்பூர் மாநகர் பகுதியில் நேற்று 241 மதுபாட்டில்களும், தாராபுரம் கோட்டத்தில் 300 மதுபாட்டில்கள், உடுமலை கோட்டத்தில் 525 மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் மதுபானக்கடைகளில் போதிய சரக்குகள் இன்றி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Related Stories: