50 ஆயிரம் ஏக்கரில் கருகும் நிலையில் பயிர்கள்

திருப்பூர், ஏப்.16: திருப்பூரில் 50 ஆயிரம் ஏக்கரில் காய்ந்து போகும் தருவாயில் உள்ள பயிர்களை மீட்க தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் நேற்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

 இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது: பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் திருமூர்த்தி அணையில் 47 அடி தண்ணீர் இருந்தும், மூன்றாம் மண்டலத்திற்கு நான்காம் சுற்று தண்ணீர் திறப்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனால், கோவை மாவட்டம் பொள்ளாச்சி முதல் பல்லடம், காங்கயம், குண்டடம், உடுமலை வடக்குப்பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பிஏபி தண்ணீரை நம்பி உள்ள விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.   இந்த பகுதிகளில் வெங்காயம், கத்திரிக்காய், புடலங்காய், வெள்ளை முள்ளங்கி உட்பட காய்கறிகள் மற்றும் பயிர்கள் 50 ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ளது. இவைகள், கடும் வெய்யில் காரணமாகவும் தண்ணீர் திறப்பு காலதாமதம் ஆனதன் காரணமாகவும் கருகும் நிலையில் உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, கருகும் பயிர்களை காப்பாற்ற 3ஆம் மண்டலத்திற்கு நான்காம் சுற்று தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த கோரிக்கை வலியுறுத்தி நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரிடம் மனு அளித்தோம். மனுவை பெற்றுக்கொண்டு இன்று (16ம் தேதி) நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால், புதன்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழி இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: