பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம்

திருப்பூர், ஏப்.16: திருப்பூர் மக்களவை தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தும் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் தேர்தலுக்கான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதற்காக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள உபகரணங்கள் அனைத்து வாக்குசாவடி மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும், வாக்காளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க ஏதுவாக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.  மக்களவை தேர்தலையொட்டி திருப்பூரில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், பதற்றமான வாக்குச்சாவடிகளாக 376 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பல்வேறு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பதற்றமான 376 வாக்குச்சாவடிகள் உட்பட மொத்தம்  885 வாக்குச்சாவடிகளை கண்காணிப்பதற்கு நவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. நவீன கேமராக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டன. இந்த கேமராக்கள் 3 மெகா பிக்சல் திறன் உடையது. இவைகள் பொருத்தப்பட்டு வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சம்பவங்களை இணையதளம் மூலம் தேர்தல் அதிகாரிகள் பார்வையிடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த கேமராக்கள் அந்தந்த வாக்குச்சாவடி பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், திருப்பூர், எல்.ஆர்.ஜி மகளிர் கலைக்கல்லூரி ஸ்டாராங் ரூம், கே.எஸ்.சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: