×

பணிகள் அரைகுறையாக உள்ளதால் பிரதமர் மோடி திறந்து வைத்தும் பயன்பாட்டுக்கு வராத சாலை

திருப்புவனம், மார்ச் 26: மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை நான்குவழிச்சாலையாக அமைக்க கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. முதற்கட்டமாக மதுரை-பரமக்குடி இடையே 76 கிமீ சாலையை மட்டும் நான்கு வழிச்சாலை  அமைக்க முடிவெடுத்து ரூ.937 கோடி ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்கரி கடந்த 2015ம் ஆண்டு திட்டத்தை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். செப்டம்பர் 2018ல் நான்கு வழிச்சாலை மக்களின் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவித்தார். மதுரை விரகனூர் ரிங் ரோட்டில் இருந்து சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி,  பார்த்திபனூர்  பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைப்பதற்காக 40 சிறு பாலங்களும், 88 கால்வாய் பாலங்களும், 60 குழாய் பாலங்களும்,  சிலைமான், திருப்புவனம், லாடனேந்தல் உட்பட  9 இடங்களில் ரயில்வே மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு சாலை அமைக்கும் பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

இதனிடையே பிரதமர் மோடி கடந்த ஜனவரி 27ம் தேதி இந்த நான்கு வழிச் சாலையை துவக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஆனால் பணிகள் முழுமையாக முடியாததால் மக்கள் பயன்பாட்டுக்கு சாலை இன்னும் வரவில்லை. இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மக்கள் கூறுகையில், ‘‘மதுரை-பரமக்குடி நான்குவழிச்சாலையில் துணை சாலை, ரவுண்டானா, விளக்கு வசதிகள் செய்யப்படவில்லை. 76 கிமீ தொலைவில் இருந்த 67 ஆயிரம்  மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி ஒரு மரம்  வெட்டினால் 10 மரக்கன்றுகள நட வேண்டும். அதன்படி 6 லட்சத்து 70 ஆயிரம்  மரக்கன்றுகள் நடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் மரங்கள்  நடப்படவில்லை. திருப்புவனம் ரயில்வே  மேம்பால பணிகளும் மந்தமாகவே நடந்து வருகிறது. ஆனால் தேர்தலை மனதில் வைத்து, முழுமையாக பணிகள் முடியாத சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். இதனால் மோடி திறந்து வைத்தும் சாலை பயன்பாட்டிற்கு வரவில்லை’’ என்று தெரிவித்தனர்.

Tags : Modi ,road ,
× RELATED கோவையில் பாஜகவின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள்: பிரதமர் மோடி மீது புகார்!