×

போலி அழைப்புகளால் பணத்தை இழக்கும் வாடிக்கையாளர்கள்

பரமக்குடி, மார்ச் 26:  ஏடிஎம் கார்டு ரகசிய எண்களை பெற்று நூதன முறையில் பணம் பறிக்கும் கும்பல் பற்றி வங்கிகள் மற்றும் போலீசார் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வங்கி வாடிக்கையாளர்களுக்கு மொபைல் மூலம் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், வங்கியிலிருந்து பேசுவதாக கூறி, உங்கள் ஏடிஎம் கார்டு ரத்தாகி விட்டது. இனி புதிய கார்டு பயன்படுத்த ஏடிஎம் கார்டு எண் மற்றும் ரகசிய எண்களை தெரிவிக்குமாறு கேட்கின்றனர். இது உண்மையென கருதி பலர் ரகசிய எண் மற்றும் கார்டு எண்களை கொடுத்து விடுகின்றனர். கொடுத்த அடுத்த நிமிடத்தில் வாடிக்கையாளரின் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுகிறது. இந்த பணத்தை ஆன்லைனில் எடுப்பதால், ஆன்லைன் மூலமாக பொருள்களை வாங்கி பணத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக வங்கிகளில் விளம்பர பலகைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் செல்போன் நம்பருக்கு தகவல் அவ்வபோது கொடுக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதும் இதனை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் உள்ளதால், இந்த மாதிரியான மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது வங்கிகள் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சர்வதேச உரிமைகள் கழக மாவட்ட தலைவர் சாமுவேல் கூறுகையில், ‘ஆன்லைன் மூலம் ஏடிஎம் மோசடியில் ஈடுபடும் மர்ம நபர்கள் பணமாக பெற்றுகொள்வதில்லை. ஏதாவது நிறுவனத்தில் பொருளாக வாங்கி பணத்தை லபக் செய்து வருகின்றனர். ஏடிஎம் கார்டு, ரகசிய எண்களை கொடுத்ததும், மோசடி நடந்தவுடன் அலைபேசிக்கு வரும் குறுந்தகவலை வங்கிக்கு கொண்டு சென்று ஸ்டேட்மன்ட் எடுத்தால், திருடிய பணத்தை கொண்டு மோசடி நபர் எந்த நிறுவனத்தில் வாங்கியுள்ளார் என்பது தெரியவரும். அதோடு பொருள்களை விற்பனை செய்த நிறுவனத்தின் கேர் நம்பர், இ.மெயில் முகவரி இருக்கும். இதில் உடனே தொடர்பு கொண்டு, அந்த நிறுவனத்திடம் மோசடி பேர்வழி குறித்து புகார் செய்தால்போதும், அவர்கள் பொருள்கள் வழங்குவதை நிறுத்தி விடுவார்கள். ஏமாற்றப்பட்டவரின் பணம் வங்கிக்கே திரும்பி வந்து விடும். இதனை தடுக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றப்பிரிவு போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதனைபோல், ராமநாதபுரம் மாவட்டத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் இந்த மாதிரியான தவறுகளை அறியாமல் செய்து விட்டு புகார் அளிக்க வந்தால், வங்கி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதை விட்டு விட்டு பணத்தை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்றார்.

Tags : Customers ,
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து 3...