×

நாகை எம்பி , திருவாரூர் எம்எல்ஏ தொகுதிகளுக்கு இந்திய கம்யூ, அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

திருவாரூர், மார்ச் 26: நாகை எம்.பி தொகுதிக்காக திருவாரூரில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதிமுக வேட்பாளர்களும் திருவாரூர் எம்.எல்.ஏ தொகுதிக்கு தி.மு.க மற்றும் அ.திமுக வேட்பாளர்களும் நேற்று மனு தாக்கல் செய்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 எம்.பி தொகுதிகள் மற்றும் திருவாரூர் உட்பட 18 எம்.எல்.ஏ தொகுதிகளுக்கான இடைதேர்தல் ஆகியவை அடுத்த மாதம் 18ந் தேதி நடைபெறுவதையொட்டி கடந்த 19ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ளது. அதன்படி நாகை  எம்.பி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலகமாக திருவாரூர் கலெக்டர் அலுவலகம் இருந்து வரும் நிலையில்  இந்த அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலுக்காக அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தொகுதியின் தேர்தல் அலுவலர் ஆனந்த் தலைமையில்  செய்யப்பட்டிருந்தாலும் கடந்த 22ந் தேதி 4வது நாள் வரையில் ஒருவர் கூட மனு தாக்கல் செய்யாததால்  இந்த அலுவலகமானது வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில்  சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்கு பின்னர் நேற்று மனு தாக்கல் நடைபெற்ற  நிலையில்  திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸட் கட்சி வேட்பாளர் செல்வராசு மதியம் 12.30 மணியளவில் தொகுதியின் தேர்தல் அலுவலர் ஆனந்திடம் மனு தாக்கல் செய்தார். அவருடன் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் பழனிச்சாமி, நாகை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கவுதமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் துரைவேலன் ஆகியோர் சென்றனர்.

இதேபோல் அதிமு.க வேட்பாளர் சரவணன்  மதியம் 1.30 மணியளவில் தேர்தல் அலுவலர் ஆனந்திடம் மனு தாக்கல் செய்தார். இதில் அமைச்சர் காமராஜ், பி.ஜே.பி மாநில செயலாளர் வேதரத்தினம், பா.ம.க மாநில துணை பொது செயலாளர் பாலு, தேமுதிக மாவட்ட செயலாளர் சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் திருவாரூர் வண்டாம்பாளையத்தை சேர்ந்த அனிதா (36) மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாலதி (26), ஊழல் ஒழிப்பு இயக்கத்தை சேர்ந்த வேதரத்தினம் (55) மற்றும் சுயேட்சையாக ஜெகதீஸ் (27), பிரேம் (38) என 6 பேர்கள் நேற்று ஒரே நாளில் மனு தாக்கல் செய்தனர்.  திருவாரூர் எம்எல்ஏ தொகுதி. இதேபோல் திருவாரூர் எம்.எல்.ஏ தொகுதியின் இடைதேர்தல் நடத்தும் அலுவலகமாக தெற்கு வீதியில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் இருந்து வரும் நிலையில் இங்கு கடந்த 19ம் தேதி முதல் 22ம் தேதி வரையில் மொத்தம் 3 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் 5வது நாளான நேற்று மதியம் ஒரு மணியளவில் திமுக வேட்பாளர் பூண்டிகலைவாணன் தேர்தல் அலுவலர் முருகதாசிடம்  மனு தாக்கல் செய்தார். அவருடன் ஒன்றிய செயலாளர்கள் கலியபெருமாள், குமரேசன், நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் வழக்கறிஞரணி மாவட்ட அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் சென்றனர்.

இதேபோல் அதிமுக வேட்பாளர் ஜீவானந்தம் மதியம் 1.15 மணியளவில் தேர்தல் அலுவலர் முருகதாசிடம்  மனு தாக்கல் செய்யதார். அவருடன் அமைச்சர் காமராஜ், பி.ஜே.பி மாநில பொது செயலாளர் கருப்புமுருகானந்தம், பா.ம.க மாவட்ட செயலாளர் ஐயப்பன், தேமுதிக மாவட்ட துணை செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் சென்றனர். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் வினோதினி (28) மற்றும் சுயேச்சையாக அமானுலுல்லா (56), சம்பத் (59), குருமூர்த்தி (28) ஆகியோரும் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் நேற்று வரையில் இந்த தொகுதியில் மொத்தம் 9 பேர் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடதக்கது.

Tags : DMK ,Nagai MP ,constituencies ,Thiruvarur MLA ,
× RELATED தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும்...