×

கும்பகோணம் பேருந்து நிலையத்துக்குள் பஸ்களை தவிர மற்ற வாகனங்களுக்கு தடை மீறினால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை

கும்பகோணம், மார்ச் 26: திருட்டு சம்பவங்களை தடுக்க கும்பகோணம் புதிய பஸ் நிலையத்துக்குள் பேருந்துகளை தவிர மற்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம் புதிய பஸ் நிலையத்துக்குள் வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பேருந்துகளில் அவசரமாக ஏறுபவர்களிடம் செல்போனை பறித்து பைக்கில் தப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடக்கிறது. இதுபோன்ற பிரச்னை குறித்து கும்பகோணம் போலீசாருக்கு தினம்தோறும் புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதையடுத்து புதிதாக பதவியேற்று வந்த கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல், கும்பகோணம் புதிய பஸ் நிலையத்திற்கு பேருந்துகளை தவிர அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதித்தார்.

இதற்காக 24 மணி நேரமும் பஸ் நிலையத்தின் இருபுற வாயிலில் போலீசாரை கொண்டு பேருந்துகளை தவிர மற்ற வாகனங்கள் செல்லாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புதிய பஸ் நிலையத்தின் உள்ளே பயணிகளுக்கு இடையூறாக இருந்த கடைகள், வெளியில் போடப்பட்டிருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் பேருந்துகளை தவிர மற்ற வாகனங்கள் செல்ல கூடாது, பஸ் நிலையம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியில் நடந்து வருகிறது, மேலும் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள், பாதையை மறித்து கடைகளை அமைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags : Kumbakonam ,
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்